தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தங்கம் வென்ற மங்கையர்

தங்கம் வென்ற மங்கையர்

தங்கம் வென்ற மங்கையர்


PUBLISHED ON : டிச 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெளஹாத்தியில் நடைபெற்ற உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இளம்பெண்கள் தங்கப் பதக்கங்கள் பெற்று ஆச்சரியப்படுத்தினார்கள். அதில், 48 கி.கி. பிரிவில் போட்டியிட்ட நீத்துவும் 51 கி.கி. பிரிவில் மோதிய சாக்ஷியும் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவாகியுள்ளார்கள்.

ஹரியாணாவில் உள்ள மூத்த குத்துச்சண்டை வீரரான ஜகதீஷ் சிங்கின் 'பிவானி பாக்சிங் கிளப்' என்ற குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உருவான குத்துத் தங்கங்கள் இவர்கள் இருவரும்.

இருவருமே, எதிராளியின் நகர்வுகளை நுணுக்கமாகக் கவனித்து, பின்னர் தங்கள் வேகத்தைக் காட்டக்கூடிய நிதானமான வீரர்கள்.

'துரோணாச்சாரியா விருது' பெற்ற ஜகதீஷ் சிங் பட்டறையில் வளர்ந்த இருவருமே அவரைப் பற்றிப் பேசும்போது, வியந்து போகின்றனர். “அவரைப் போன்ற குரு உலகில் யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். முதலில் அவர் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தது ஒழுக்கம் தான். அதன் பின்னரே குத்துச் சண்டைக்கான நுணுக்கங்களைப் போதித்தார்,” என்றார் நீத்து.

சாக்ஷியோ, “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியைத் தொடங்கியபோது, அவர் எனக்குக் குத்துச்சண்டையின் அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்ததுடன், என் ஸ்டைலை நேர்த்தியாகவும் மாற்றினார். அதன் பின்னர் படிப்படியாக என்னுடைய விளையாட்டை மேம்படுத்திக்கொண்டேன். பயிற்சியின் மூலமே அவர் என்னை மேலும் செம்மைப்படுத்தினார்” என்றார்.

படிப்படியாக பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் அதில் கோப்பைகளைத் தட்டிவரும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைத்தது. அதில் சிரமங்கள் இல்லாமல் இல்லை.

சைவ உணவுப் பழக்கமுடைய சாக்ஷிக்கோ, வெளிநாட்டுப் பயணங்களின்போது, உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது பயங்கர கஷ்டம்.

நீத்துவோ, தன்னுடைய அப்பாவின் கனவை நனவாக்கவே போராடுகிறார். சண்டிகர் சட்டப்பேரவையில் பணியாற்றிக்கொண்டிருந்த நீத்துவின் தந்தை, தம் மகளின் முன்னேற்றத்துக்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு வேலையிலிருந்து விலகி, அவள் அருகிலேயே இருக்கிறார். இதனால் குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிரமங்களையும் தாங்கிக்கொண்டு, உறவினர்களின் ஏச்சுப் பேச்சுகளையும் தாங்கிக்கொண்டு, முன்னேற மோதிக்கொண்டிருக்கிறார் நீத்து.

கெளஹாத்தி போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு, இருவருமே மிகவும் உற்சாகத்தில் இருந்தனர். “என்னுடன் மோதும் எதிராளியின் பலம் என்னென்ன என்பதை என்னுடைய பயிற்சியாளர் எனக்கு விளக்கினார்,” என்று நீத்து சொல்ல, “எது என்னுடைய பலமோ, அதன் அடிப்படையில் விளையாடுமாறு ஜகதீஷ் சார் எனக்கு அறிவுறுத்தினார்” என்றார் சாக்ஷி.

இருவரது கனவும் இப்போது நிறைவேறியுள்ளது.

இந்தியாவுக்குக் கூடுதலாக இரண்டு தங்கங்கள் கிடைத்துள்ளன. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் யூத் ஒலிம்பிக் விளையாட்டிலும், இதர சர்வதேசப் போட்டிகளிலும் இவர்கள் வெற்றிவாகை சூடுவது நிச்சயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us