தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கஷ்டத்தை இஷ்டமாக்கும் கணிதமேதை!

கஷ்டத்தை இஷ்டமாக்கும் கணிதமேதை!

கஷ்டத்தை இஷ்டமாக்கும் கணிதமேதை!


PUBLISHED ON : ஆக 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்னிஜோ பானர்ஜி, லண்டனில் வசிக்கிறார். வயது 17. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரைப் பொறுத்தவரை கணிதம் மிகவும் விந்தையானது. காரணம், 'நமது பொதுப்புத்தி சொல்லும் பல விஷயங்கள், கணிதம் வழங்கும் தீர்வுகளோடு ஒத்துப்போவதில்லை. கணிதம் விசித்திரமான விடைகளையே வழங்கும்' என்கிறார்.

இளவயது கணிதமேதையான இவர், 12 வயதிலேயே, பிரபல IQ தேர்வான மென்சாவில், 162 புள்ளிகள் பெற்றுள்ளார். ஐன்ஸ்டீனின் IQ புள்ளிகள் 160. பிரபல அறிவியல் எழுத்தாளரான டேவிட் டார்லிங்குடன் இணைந்து 'Weird Maths' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார், அக்னிஜோ. அதில், பிரட் கீழே விழுந்தால், ஏன் வெண்ணெய் தடவிய பக்கமே தரையில் படுகிறது? பிரபஞ்சம் தட்டையா வட்டமா? ஏலியன்களின் இசை மனிதர்களுக்குப் பிடிக்குமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, கணித ரீதியாக வியக்கவைக்கும் பதில்களைத் தருகிறார். புத்தக வெளியீட்டுக்காக கோல்கட்டாவுக்கு வந்த அவருடனான உரையாடல்...

புத்தகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

எங்கள் புத்தகத்தில் பேசப்படும் கணிதம், பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிக்கப்படும் கணித வகையைச் சார்ந்ததல்ல. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, Infinity போன்ற கணிதத் தலைப்புகள், வெகுஜன கணிதப் புத்தகத்தில் காணக்கிடைப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில், பொதுப்புத்தி நம்பிக்கையுடன், கணித முடிவுகள் ஒத்துப்போவதில்லை. முரண்படும் இத்தகைய விஷயங்களைப் பற்றிப் பேசுவதால்தான், 'விசித்திரக் கணிதம்' என்று தலைப்பிட்டுள்ளோம்.

சிக்கலான கணிதப் பிரச்னைகளை விளக்க, நிறைய ஒப்பீடுகளைப் பயன்படுத்தியுள்ளீர்களே...

எங்கள் புத்தகத்துக்கான வாசகர்கள் கணிதப் பின்புலம் இல்லாதவர்கள், அதேசமயம் கணிதத்தில் ஆர்வம்கொண்டவர்கள். இவர்களுக்குக் கணிதத்தைப் புரியவைக்க, இத்தகைய உத்திகள் மிகவும் பயனுள்ளவை. சுவாரசியமான ஒப்பீடுகளையும், அன்றாட வாழ்க்கை உதாரணங்களையும் புகுத்தி, கணிதத்தின் கடினத்தன்மையைக் குறைத்து எளிதாக்கி இருக்கிறோம். கணிதத்தின் மீது, வாசகர்களுக்கு அதிக விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதே நோக்கம்.

கணிதத்துக்கு எவ்வகையில் பங்களிப்பு செய்ய விரும்புகிறீர்கள்?

Clay mathematics Institute, ஏழு கணிதப்புதிர்களை பட்டியலிட்டுள்ளது. அவை, உலகின் தீர்க்கப்படாத அதிக சிக்கலான கணிதப் புதிர்கள். அவற்றைத் தீர்ப்போருக்கு 10 லட்சம் டாலர் பரிசு கிடைக்கும். இதுவரை, அதில் ஒன்று மட்டும்தான் தீர்க்கப்பட்டுள்ளது. அவற்றில் சில கேள்விகளை என்னால் முழுதாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை; அந்த அளவுக்குக் கடினமானவை. ஆனாலும், அவற்றைத் தீர்த்துப் பதக்கம் வாங்குவதில் உறுதியாக உள்ளேன்.

கணிதத்தைக் கண்டு கலங்கும் மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

மாணவர்கள் கற்க முயலாதவரை, யாராலும் கணிதத்தைக் கற்பிக்க முடியாது. கணிதம் மீது பயமிருந்தாலும், தேவையான உழைப்பும், முயற்சியும் அவசியம். இதைச் செய்யும் மாணவர்களால் நிச்சயம் கணிதத்தில் சிறப்பான நிலையை எட்ட முடியும். 'கணிதப் புதிரை மாணவர்கள் முதலில் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழி.' என்று எனது ஆசிரியர் டேவிட் டார்லிங் அடிக்கடி சொல்வார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us