தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மேதைமை மணித்துளிகள்

மேதைமை மணித்துளிகள்

மேதைமை மணித்துளிகள்


PUBLISHED ON : ஆக 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உமா மிஸ்ஸின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். ஓவியாவையும் என்னையும் இன்னும் ஒருசிலரையும் மிஸ் அழைத்திருந்தார். இன்டர்வெல்லுக்குப் பின்னர் விளையாட்டு பீரியட் என்பதால், கீழே இறங்கிப் போனோம். அவரது வகுப்பறை கரும்பலகையில், “மேதைமை மணித்துளிகளுக்கு வருக, வருக” என்று சாக்குக்கட்டியால் எழுதப்பட்டு, சுற்றி பல்வேறு வண்ணச் சாக்குக்கட்டிகளால் அவ்வளவு பூவேலைகள். வழக்கம்போல், உமா மிஸ் இன்றும் ஏதோ ஒரு புதுமைக்கு அடிகோலப் போகிறார்கள் என்பது புரிந்துவிட்டது.

உமா மிஸ் பேச ஆரம்பித்தார்…

“எல்லோரும் புக்ஸை மூடி உள்ளே வெச்சுட்டீங்களா?” “எஸ் மிஸ்…” கோரஸாக ஒலித்தது மாணவர்களின் குரல்.

“குட். இப்போ நாம படிக்கப் போறதில்லை…எழுதப் போறதில்லை. பேசப் போறோம். உங்க ஹாபி என்ன, விருப்பங்கள் என்ன, உங்களுக்கு என்னவெல்லாம் செய்யப் பிடிக்கும்னு சொல்லணும். சொல்ல முடியுமா?”

வகுப்பில் திடீர் அமைதி. யாரும் குசுகுசுவென்றுகூட பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 'எனக்கு என்ன செய்யப் பிடிக்கும்?' என்று நானே கேட்டுக்கொண்டேன். பல சமயங்களில் சைக்கிளில் போகும்போதோ, வேறு ஏதாவது படித்துக்கொண்டு இருக்கும்போதோ, இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இப்போ மிஸ் கேட்டவுடன், ஞாபகம் வரமாட்டேன் என்கிறது. என்னைப் போலவே அந்த வகுப்பறையில் இருந்த மாணவர்களும் தடுமாறியிருக்கவேண்டும்.

“யார் வேணும்னாலும் ஆரம்பிக்கலாம். நான் மியூசிக் கம்போஸ் பண்ணனும், நான் அனிமேஷன் படம் பண்ணனும் அப்படின்னெல்லாம் யாரும் யோசிக்கலையா?”

“யெஸ் மிஸ்…” அபரிமித உற்சாகத்தில் நான்கைந்து குரல்கள் ஒலித்தன.

“எனக்கு நாய் வளர்க்கணும் மிஸ்.” என்றாள் ஒரு மாணவி.

“மழை ஏன் ஒரேயடியா கொட்டுதுன்னு தெரிஞ்சுக்கணும் மிஸ்..”

“நிலச்சரிவு ஏன் ஏற்படுதுன்னு தெரியணும் மிஸ்.”

“எனக்கு ஒரு புக் எழுதணும் மிஸ்.”

“எப்படி டாட்டூ போடறாங்கன்னு கத்துக்கணும் மிஸ்.”

“செல்போன்ல ஆப் டெவலப் செய்யணும் மிஸ்…”

ஒருமித்த குரலில் படபடவென ஒலிக்கத் தொடங்கியதும், வகுப்பறையே களேபரமானது. உமா மிஸ் சிரித்துக்கொண்டே அவசர அவசரமாக கையமர்த்தினார். “ஒவ்வொருத்தரா சொல்லுங்க. எல்லோரும் பேசினா புரியாது இல்லையா…”

அத்தனை பேர் முகங்களிலும் ஆர்வம். சொல்வதற்கு விஷயம் கிடைத்துவிட்ட திருப்தி. எனக்கும் தான். நான் ஒரு சின்ன நூலகம் அமைக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அதுவும் என்னை மாதிரி மாணவர்களுக்கான நூலகம். அது காலையும் மாலையும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் வரலாம். அங்கே உட்கார்ந்து படிக்கலாம். அதற்கு ஏற்ப குஷன் சேர்கள் போடப்பட்டிருக்க வேண்டும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகலாம்.

ஆனால், வெறுமனே படித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு புத்தகத்தின் கடைசியிலும் நான்கு வெள்ளைத் தாள்களை ஒட்டிவைக்க வேண்டும். அந்தப் புத்தகங்களைப் படித்த மாணவர்கள், தங்கள் அபிப்பிராயங்களை அதில் எழுதித் தரவேண்டும். மாதம் ஒரு முறை ஒரு கூட்டம் போட்டு, மாணவர்களே அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றிப் பேச வேண்டும்.

முடிந்தால் ஒரு வெப்சைட் உருவாக்கவேண்டும். அதில் ஒவ்வொரு மாணவரும் தனக்குப் பிடித்த புத்தகங்களை வரிசைப்படுத்தி, ரேட் பண்ணவேண்டும். அதில் டாப் ரேட்டிங் பெற்ற சிறந்த புத்தகங்களை, 'அந்த மாதத்தின் சிறந்த புத்தகம்' என்று அறிவிக்க வேண்டும்.

நினைக்க நினைக்க அருவி மாதிரி எண்ணங்கள். ஒன்றைத் தொட்டு மற்றொன்று என்று எவ்வளவோ யோசித்து வைத்திருக்கிறேன். 'புக் கேம்ப்' என்று ஒன்று போடவேண்டும். இரண்டு, மூன்று நாட்கள், வெறும் புத்தகங்கள் பற்றியே பேச வேண்டும். அல்லது யாராவது எழுத்தாளர்களைக் கூப்பிட்டுப் பேசச் சொல்ல வேண்டும். கதை எழுதச் சொல்லித்தர வேண்டும். முகாம் முடிவதற்குள், சிறந்த புத்தகங்கள் எப்படி இருக்கும், அதை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்…இன்னும், இன்னும்.

சட்டென என் கற்பனைகளை நிறுத்திக்கொண்டேன். அது தறிகெட்டு ஓடிக்கொண்டே இருந்தது. வகுப்பறையில் ஒவ்வொரு மாணவரும் பேசிக்கொண்டே போவதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

“விதவிதமான பட்டாம்பூச்சிகளைப் பத்தி தெரிஞ்சுக்கணும் மிஸ்.”

“நாம் சாப்பிடறது எப்படி ஜீரணமாகுது, அது எப்படி நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கணும் மிஸ்.”

“பாண்டா கரடி அழிஞ்சுக்கிட்டே வருதாம் மிஸ். அதை எப்படித் தடுத்து நிறுத்தி, காப்பாத்தறதுன்னு தெரிஞ்சுக்கணும் மிஸ்.”

“புல்லாங்குழல்ல ஏன் அத்தனை துளைகள் இருக்கு? அதுக்கு ஏதேனும் காரணம் இருக்கான்னு தெரியணும் மிஸ்.”

“வெரிகுட். வெரிகுட். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு இல்லையா. இதை ஒவ்வொருவரும் ஒரு கேள்வியா மாத்திக்கணும். உதாரணமா, 'பாண்டா கரடி ஏன் அழிவைச் சந்திச்சுக்கிட்டு வருது?', 'புல்லாங்குழல்ல ஏன் இத்தனை துளைகள்?' அப்படின்னு தெளிவான கேள்வியா உருவாக்கிக்குங்க. ஏன்னா, நீங்க நிறைய விஷயங்களைச் செய்யணும்னு நினைக்கலாம். ஆனால், அதுக்கு ஓர் தொடக்கப் புள்ளி வேணும் இல்லையா. அது தெளிவான கேள்வியா இருக்கட்டும்.”

“அப்புறம் மிஸ்?”

“அதைப் பத்தி ஆய்வு செய்யணும். புக்ஸ், இன்டர்நெட், என்சைக்ளோபீடியான்னு நிறைய படிக்கணும். குறிப்புகள் எடுத்துக்கணும். அதை நீங்க எப்படி வேணும்னாலும் பிரசன்ட் பண்ணலாம். கட்டுரையா எழுதலாம், போஸ்டர் டிசைன் பண்ணலாம், பி.பி.டி.யா மாத்தலாம், கிராபிக்கலா கொடுக்கலாம், வீடியோவா கொடுக்கலாம், ஓவியங்களா வரையலாம்…இதை வீட்டுல செய்யவேண்டாம். இங்கேயே இந்த 'ஜீனியஸ் ஹவர்'ல செய்யலாம். நமக்கு இனிமே ஒவ்வொரு வார புதன்கிழமையும் 'ஜீனியஸ் ஹவர்' உண்டு. அதுல இதையெல்லாம் செஞ்சு இன்னும் நாலைஞ்சு வாரத்துக்குள்ள முடிக்கணும். சரியா?”

அரங்கமே அதிர்வது போல், வகுப்பே 'சரியென்று' முழங்கியது. அந்த உற்சாகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, சாதாரணமாக வகுப்பில் பார்க்க முடியாத ஒன்று. சாயங்காலம் வீடு வரும்போது உமா மிஸ் இதை விளக்கினார்:

“மேதைமை என்பது ஒரு சதவீதம். 99 சதவீதம் கடின உழைப்புதான். அதாவது தங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பின்பற்றி, மேலதிகமா தெரிஞ்சுக்கிட்டு, அதுலேயே முட்டி மோதி, ஏதேனும் ஒரு புது விஷயத்தை உருவாக்கறதுதான் கண்டுபிடிப்பு. ஆர்வம் இருக்கலாம், ஈடுபாடு இருக்கலாம், ஆனால், அதற்கான முயற்சி வேண்டும். தொடர் உழைப்பு வேண்டும். அப்பத்தான் கண்டுபிடிப்புகள் நடக்கும். அதைத்தான் இந்த 'ஜீனியஸ் ஹவர்'ல உருவாக்கணும். இது ஒருவகையில் தங்களோட திறமைகளையும் கனவுகளையும் கண்டுபிடிச்சுக்கறதுக்கும், அந்தக் கனவுகளை அடைவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்குமான ஏற்பாடு.”

என் சின்ன நூலகத்தை எப்படி உருவாக்கலாம் என்பது பற்றி மனத்துக்குள் திட்டமிடத் தொடங்கினேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us