PUBLISHED ON : ஆக 27, 2018

மின் விலாங்கு
ஆங்கிலப் பெயர்: 'எலெக்ட்ரிக் ஈல்' (Electric Eeel)
உயிரியல் பெயர்: 'எலெக்ட்ரோபோரஸ் எலெக்ட்ரிகஸ்' (Electrophorus electricus)
உயிரியல் குடும்பம்: 'ஜிம்னோடிடே' (Gymnotidae)
நீளம்: 8 அடி
எடை: 20 கி.
நீந்தும் வேகம்: மணிக்கு 8 கி.மீ.
வாழ்நாள்: 22 ஆண்டுகள்
எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்வதற்காக உடலில் மின்சாரம் உற்பத்தி செய்வதால், 'மின் விலாங்கு மீன்' என்று இதற்குப் பெயர். நீண்ட உருளை வடிவத்தில் இருக்கும். உடலின் மேற்புறம் கரும் சாம்பல் நிறத்திலும், அடி வயிற்றுப் பகுதி மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படும். நன்னீர்வாழ் மீனான இது, சேற்றுக்கு அடியிலேயே வாழும். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல் வந்து சுவாசித்துவிட்டு மறுபடியும் சேற்றுக்குள் சென்றுவிடும்.
இதன் உடம்பில் சுமார் 650 வோல்ட் மின்சாரம் வரை உற்பத்தி ஆகிறது. உடலில் உள்ள 'எலெக்ட்ரோசைட்ஸ்' (Electrocytes) இதை உருவாக்குகிறது. இரையைத் தாக்கவும், எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் இந்த 'ஷாக்' உத்தியைப் பயன்படுத்துகிறது. தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றின் கிளை நதிகளில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. நன்னீரில் வாழ்ந்தாலும், இவை முட்டையிடுவதற்காக கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்கின்றன.
ப.கோபாலகிருஷ்ணன்
