PUBLISHED ON : ஆக 27, 2018

'மிசஸ். ஹியூம்ஸ் பீஸன்ட்' (Mrs. Hume's Pheasant)
உயிரியல் பெயர்: 'சிமாடிகஸ் ஹியுமியே' (Syrmaticus humiae)
வேறு பெயர்: கம்பி வால் மயில் (Bar Tailed Pheasant)
நீளம்: 90 செ.மீ.
வால் நீளம்: 50 செ.மீ.
எடை: 1 கி.
வாழ்நாள்: 3 ஆண்டுகள்
காட்டுப் பறவையான 'மிஸஸ் ஹியூம்ஸ் பீஸன்ட்', மயில் போன்ற தோற்றத்தை உடையது. தலைப்பகுதி சிவப்பு நிறத்திலும், உடல் பழுப்பு சாம்பல் நிறத்திலும் காணப்படும். வால் பகுதி நீளமாக சாம்பல், கருப்பு கலந்த வண்ணத்தில் இருக்கும். கழுத்துப் பகுதி நீல நிறம்.
வறண்ட, மித வெப்ப மண்டல பசுமைக் காடுகள், அடர்ந்த காடுகளின் ஓரப் பகுதிகளில் வாழும். ஓக், பைன் மரங்களைக்கொண்ட ஊசியிலைக் காடுகளில் அதிகம் காணலாம். இந்தியா, சீனா, மியான்மர், தாய்லாந்து ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன. பெரும்பாலும் தரையிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதிக உயரத்திற்குப் பறக்காது. இலை, விதை, வேர், பூச்சி போன்றவையே இதன் உணவு. இலை, குச்சிகளைப் பயன்படுத்தி மரக்கிளைகளில் கூடு கட்டும்.
இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் ஜூலை வரை. ஒரு முறைக்கு 3 முதல் 12 முட்டைகள் இடும். காடுகள் அழிப்பு, இயற்கைச் சுரண்டல் போன்ற காரணங்களால், வாழிடம் அழிக்கப்பட்டு இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியப் பறவையியலின் தந்தை என போற்றப்படும் 'ஆலன் ஆக்டோவியன் ஹியூம்' (Allan Octovian Hume) என்பவரின் மனைவி 'மரியா பர்ன்லி'க்கு (Maria Burnley) மரியாதை செய்யும் விதமாக இந்தப் பறவைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
- கிருபா நந்தினி
