PUBLISHED ON : ஜன 28, 2019

உமா மிஸ் என்னையும் ஓவியாவையும் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். மதிய இடைவேளையின்போது, ஆசிரியர்களின் ஓய்வு அறைக்குப் போனோம். சற்று நேரத்தில் உமா மிஸ் அறைக்கு வந்தவுடன்,
“வாங்க, வாங்க, அடுத்த மாசம் மூணு நாள் 'ரைலா' கேம்ப் நடக்கப் போகுது. நீங்க ரெண்டு பேரும் போகணும். உங்க பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிடுங்க….”
“ரைலான்னா என்ன மிஸ்?”
“தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன் போன்ற திறன்களையெல்லாம் நீங்க கத்துக்கிட்டு, நல்லா முன்னுக்கு வரணுங்கறதுக்காக நடத்தப்படற கேம்ப் இது. முழுசும் ரெஸிடென்ஷியல். மூணு நாளும் தங்கியிருந்து தெரிஞ்சுக்கணும்… ரொம்ப நல்லா இருக்கும்.”
உமா மிஸ் எதைச் சொன்னாலும் செய்யும் எங்களுக்கு, அவரது உற்சாகமே மேலும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
“என்னிக்கு நடக்குது, தேதிகள், இடம் எல்லாம் சீக்கிரம் தெரிஞ்சுடும். சொல்லிடறேன். பதிவு செஞ்சுக்கலாம். உங்கள நீங்களே கண்டுபிடிச்சுக்கறது இது ஒரு நல்ல இடம்…”
“படிப்பு நேரத்துல இது எதுக்கு மிஸ்? எக்ஸாமெல்லாம் வரப்போவுது…” ஓவியாதான் லேசாகத் தயங்கினாள். உமா மிஸ் முகத்தில் ஆச்சரியம் வெளிப்பட்டது.
“ஸ்கூல்ல கத்துக்கறதைவிட, வாழ்க்கையைக் கத்துக்கறது முக்கியம் ஓவியா…ஒருதரம் போய்த்தான் பாரேன். நான் சொல்றது விளங்கும்.”
“நிறைய பாடங்களைப் படிக்கவே இல்லை மிஸ். படிக்கணும்.”
சற்றுநேரம் ஓவியா முகத்தைப் பார்த்த உமா மிஸ், “என்னிக்காவது உன்னுடைய தலைமுடியை நீயே பின்னிக்கிட்டிருக்கியா? பையில துணியெல்லாம் எடுத்து அடுக்கி வெச்சிருக்கியா?”
“இல்லை மிஸ். அம்மாதான் செய்வாங்க.”
“எப்போ நீ இதையெல்லாம் கத்துப்பே? மேலே என்ன படிக்கணும், என்னவாக ஆகணும்னு ஏதாவது யோசிச்சிருக்கியா?”
ஓவியா பதில் பேசவில்லை. பதில் இல்லை என்றுதான் அர்த்தம்.
“டென்மார்க் நாட்டுல, பள்ளிக்கு வெளியே, பள்ளிக்கு அப்புறம்னு
ஒரு கான்செப்டே ரொம்ப வருஷமா இருக்கு தெரியுமா?”
“என்ன கான்செப்ட் மிஸ் இது?”
இது நான்.
“Efterskole systemனு இதுக்குப் பேரு. 1849லேருந்து அங்கே பழக்கத்துல இருக்கு. அதாவது, இடைநிலைப் பள்ளி முடிச்சுட்டு, 14 வயசுலேருந்து 16 வயசுக்குள்ள இருக்கிற பசங்க, அடுத்து என்ன செய்யணுங்கறதுக்கு வழிகாட்டுற திட்டம்.
உறைவிடப் பள்ளி மாதிரிதான் இது இருக்கும். அதுவும் டென்மார்குல இருக்கிற ஃபாபோர்க் (Faaborg) என்ற இடத்துல இப்படி ஒரு பள்ளி இருக்கு. அந்த நாடு முழுவதிலும் இதுமாதிரி 260 ஸ்கூல்கள் இருக்கு. அதுல ஃபாபோர்க் ஸ்கூல் முக்கியமானது. 124 மாணவர்கள் இருக்காங்க. சாப்பிடறது, தூங்கறது, அத்தனை வேலைகளையும் செய்யறது இந்த மாணவர்கள்தான்.
நம்ம நாட்டுல அந்தக் காலத்துல இருந்த குருகுலம் மாதிரிதான். ஒவ்வொரு நாள் இரவும் ஒன்றிரண்டு ஆசிரியர்களும் மாணவர்களோடு சேர்ந்து இருப்பாங்க. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பாங்க. இந்தப் பள்ளியில் ஆசிரியர்களைத் தவிர இருக்கிற ஒரே நபர், சமையல்காரர்தான்.
அத்தனை வேலைகளையும் மாணவர்கள் தான் செய்யணும். வகுப்புகளைக் கூட்டுவது, ஹாஸ்டலைக் கவனிச்சுக்கறது, சமையல்ல உதவறது… என்ன வேலை உண்டோ, அத்தனையும் இங்கே செய்யணும்.
படிப்பு பெரிசா இல்லை. அதே வகுப்புப் பாடங்களைத்தான் பகல்நேரம் முழுசும் சொல்லிக் கொடுப்பாங்க. ஆனால், வகுப்புக்கு வெளியே கத்துக்கற உலகப் பாடங்கள்தான் இங்கே முக்கியம்.
டென்மார்க் நாடே இதற்கான ஏற்பாடு செஞ்சிருக்கு. இதற்கான செலவுகளை எல்லாம் அந்த நாட்டோட கல்வித்துறை ஏத்துக்குது. மாணவர்கள் தன்னிறைவு பெற்றவர்களாக, வாழ்க்கையோட சவால்களை எதிர்கொள்கிறவர்களாக, தங்களுக்குன்னு ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்கிறவர்களாக, சுதந்திரமான பிரஜைகளாக உருவாக்கறதுதான் இந்தத் திட்டம்….கேக்கவே எவ்வளவு நல்லா இருக்கு இல்ல.”
“ஆமாம் மிஸ். எத்தனை வருஷம் இப்படி இருக்கணும் மிஸ்?”
“மூணு வருஷம் வரைக்கும் இருக்கலாம். ஒவ்வொரு வருஷமும் 28 ஆயிரத்து 500 பசங்க, இந்த வாழ்க்கைக் கல்வி ஸ்கூல்களில் சேர்ந்துக்கறாங்க… இதுக்காக பலபேர் காத்துக்கிட்டு இருக்காங்க.”
“அப்படியா மிஸ்?”
“ஆமாம். எப்பவும் மூணு வருஷம் வெயிட்டிங் லிஸ்ட் இருந்துக்கிட்டே இருக்கு.”
“என்ன கத்துப்பாங்க மிஸ்?”
“உங்க வயசுல பல விஷயங்கள் தெரியாது. அனுபவங்கள் கிடையாது. ஆனால், இந்த வயசுலதான் உண்மைகள் புரியணும். யதார்த்தம் உறைக்கணும். எல்லோரும் எல்லா வசதிகளும் படைத்தவர்கள் கிடையாது. ஒரு சிலருக்கு உடல் குறைகள் இருக்கலாம். வேறு விதமான பாதிப்புகள் இருக்கலாம். இவங்களையெல்லாம் நாம் வாழ்க்கையில் சந்திக்கவே மாட்டோம். அல்லது அவங்களோட பழகக்கூட மாட்டோம். ஆனா இந்தப் பள்ளிகள்ல எல்லாவிதமான மாணவர்களுக்கும் இடமுண்டு. அவர்களோட எப்படி இணக்கமா, ஒருங்கிணைஞ்சு வாழணும்னு கத்துக்கணும். குறைகளோடதான் உலகம் படைக்கப்பட்டிருக்குங்கற உண்மை மனசுல உறைக்கணும்.”
“நானெல்லாம் போனா ஒண்ணுமே செய்யமாட்டேனே மிஸ்? அம்மா, அப்பா இல்லைன்னா என்னால ஒண்ணுமே முடியாது…”
“கரெக்ட், பிறரைச் சார்ந்திருக்கும் நிலைமை முழுசா மாறிப்போயிடும். எப்படி உன்னையே நீ தகுதிப்படுத்திக்கணும், எல்லா சவால்களையும் எதிர்கொள்ள பழகணும்னு கத்துப்பே. தன்னம்பிக்கை வளரும், துணிச்சல் கைகொடுக்கும். அதோடு சகமனிதர்களை சக ஜீவன்களாகப் பார்க்கும் அன்பும் பண்பும் வளரும். ஏற்றத்தாழ்வு, பாகுபாடுங்கற உணர்வு முற்றிலும் அற்றுப் போகும். முற்றிலும் வித்தியாசமான எதிர்காலத்தை உருவாக்குற, புதிய சிந்தனை, புதிய வாழ்க்கை முறை, புதிய அணுகுமுறை ஆகியவை இங்கே கிடைக்கும்.”
“மூணு ஆண்டுகள் முடிஞ்சவுடனே என்ன ஆகும் மிஸ்?”
“மேல்நிலை வகுப்புக்கு மாணவர்கள் தயாராயிடுவாங்க. அங்கே அவங்களோட படிப்புகள், அவங்களோட சொந்த முடிவுகளாக இருக்கும். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சுயமுடிவா இருக்கும். வாழ்க்கை அவங்க கையில நிறைஞ்சு இருக்கும். அது மாதிரியான வசதிகள் இங்கே இல்லை. குறைஞ்சபட்சம் 'ரைலா' மாதிரியான முகாம்களுக்குப் போனாலாவது உங்களுக்கு வாழ்க்கை வெளிச்சம் கிடைக்கும்னு தோணிச்சு... யோசிச்சுச் சொல்லுங்க.” என்றார் உமா மிஸ்.
நான் கண்டிப்பாகப் போகவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.
ஓவியா முகத்திலும் தெளிவு ஏற்பட்டது போல் தோன்றியது.
