PUBLISHED ON : ஆக 15, 2016

நம் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இருக்கும் மனப்பாடப் பகுதியை நினைவில் வைத்துக்கொள்வது ரொம்ப ஈஸி! சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
என்னென்ன விஷயங்கள்?
உதாரணத்துக்கு ஒரு திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை'.
மனப்பாடம் செய்ய வேண்டிய எல்லாச் செய்யுள்களுமே ஏதோ ஓர் இலக்கணத்துக்கு ஏற்ப எழுதப்பட்டவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட பா வடிவமாக இருக்கும். திருக்குறளில் எல்லாப் பாட்டுகளுமே வெண்பா வகையைச் சேர்ந்தவை. இரண்டே அடிகள் / வரிகள் இருப்பதால் 'குறள் வெண்பா'.
எல்லாப் பா வகைகளுக்கும் எதுகை, மோனை போன்ற அழகுகள் இருக்கும்.
இந்தக் குறளில் முதல் வரியைப் பாருங்கள்:
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை' இதில் முதல் சீர், 'அகழ்வாரை'. இதற்கு எதுகையாக அடுத்த வரியில் வரும் சொல் - இகழ்வார். இரண்டாம் எழுத்து ஒத்துவருவது எதுகை. அகழ்வார் இகழ்வார் என்று சொல்லிப் பாருங்களேன், சந்தமும் ஒரே மாதிரி ஒலிக்கும்.
கேள்வித் தாளிலேயே, 'அகழ்வாரை' என்று தொடங்கும் திருக்குறளை எழுதுக என்றுதானே கேட்பார்கள்… அகழ்வாரை என்று போட்டுவிட்டு அதற்கு எதுகையாக அடுத்த வரியில் இகழ்வார் என்று போட்டுக்கொள்ளலாம். ஏழு சீரில் ரெண்டு சீர் முடிந்தது!
அகழ்வாரைக்கு அடுத்து என்ன? வகுப்பில் தமிழய்யா (அல்லது தமிழம்மா) சொல்லிக்கொடுத்தது நினைவில் இருக்கிறதா, அகழ்வாரை என்றால் தோண்டுபவரை. இது போதும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல, வரைக்கும் வந்துவிட்டது.
அதைப்போல, என்ன செய்ய வேண்டும்? தம்மை இகழ்பவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் தலையாய பண்பு. இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
அதாவது,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
முடிஞ்சுதா?!
