PUBLISHED ON : ஜன 25, 2016

ஷார்ப்: ஏய் மஞ்சு! வா செல்ஃபி (Selfie) எடுக்கலாம்.
மொக்கை: புதுசா டிரெஸ் எதுவும் இந்தப் பேர்ல வந்திருக்கா? இப்ப ஜவுளிக் கடைக்கு போறமா?
ஷா: உங்கிட்ட வந்து இத சொன்னேன் பாரு… செல்ஃபிங்கற வார்த்தைக்கு 'சுயமாக படங்களை எடுப்பது' ன்னு அர்த்தம். அதான் அப்டி ஒரு பேரு. சுயமி, தன்மி, தற்படம் என புதுசு புதுசா தமிழ்லயும் பேரும் வைக்குறாங்க.
மொ: அட! இதுக்கு செல்ஃபின்னு பேரு வச்சது யாரு?
ஷா: அதுவா! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் ஹோப் (Nathan Hope). அவரு தன்னோட படத்தை அவரே எடுத்து 2002 ல செல்ஃபி'ங்கற பேர்ல இணையதளத்துல போட்டாரு. அதுக்கு அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா இது பழக்கத்துக்கு வந்தது.
மொ: நமக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குதே. எங்க இருந்துதான் இப்படி வார்த்தை எல்லாம் யோசிக்குறாங்களோ தெரியல?
ஷா: இப்போ இந்த வார்த்தைய சொல்லாத ஆளே கிடையாது தெரியுமா!
மொ: ஓ! அவ்ளோ பிரபலமான வார்த்தையா அது?
ஷா: ஆமா! ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (Oxford Dictionary) 2013-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக இதைத் தேர்ந்து எடுத்ததுன்னா பாத்துக்கோ!
மொ: என்னென்னமோ சொல்ற. மொபைல்போனை, நான் அதிகமா பயன்படுத்த மாட்டேன். அதான் எனக்குத் தெரியல சாந்தி.
ஷா: அதுவும் சரிதான்! படிக்குற நேரங்களில் மொபைல் ரொம்ப பயன்படுத்த கூடாது. எக்குத் தப்பான இடங்கள்ல நின்னு செல்ஃபி எடுக்கறேன்னு சொல்லி எலும்பை உடைச்சுக்காம கவனமா எடுக்கணும். இதெல்லாம் போக புதுசா வர்ற விஷயங்களை ஆர்வமா தெரிஞ்சுக்கணும். சரியா?
மொ: சரி. அதெல்லாம் இருக்கட்டும். வா செல்ஃபி எடுக்கலாம்!
ஷா: கொஞ்சம் பொறு! ரெண்டு பேரு சேந்து எடுக்கற படத்தை செல்ஃபினு சொல்லலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
