PUBLISHED ON : ஆக 01, 2016

எந்தத் துறையிலும் முதலாவதாக சாதனை செய்பவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். அப்படி, மனித குலம் உள்ளவரை ஒருவரின் பெயர் புகழுடன் இருக்கப்போகிறது. அவர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong).
நிலாவில் கால் பதித்துவிட்டு வந்தவர். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் பிறந்தவர். ஆறு வயதில் விமானத்தில் பறந்தவருக்கு, தானும் விமானம் ஓட்டினால் என்ன என்ற ஆர்வம் பிறந்தது. தன் 16ஆம் வயதில் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்தார். பதினாறாம் வயதில் விமானம் ஓட்டும் உரிமத்தையும் வாங்கிவிட்டார்.
அவர் வீட்டின் நிலவறையில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை போல் அமைத்து அதில் காற்றை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செலுத்தினார். அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்தார். இந்த அனுபவ அறிவால் மாதிரி விமானங்களை உருவாக்கினார். வானியல், விமானக் கட்டுமானம், வடிவமைப்பு, விமானத்தின் வழித்தடங்கள் போன்றவற்றிலும் தேர்ந்தார். பக்கத்து வீட்டில் இருந்த சக்திமிக்க தொலைநோக்கியால் நட்சத்திரங்களையும் நிலவையும் கோள்களையும் பார்ப்பது அவரது வழக்கம். அது, அவருடைய வான்வெளி ஆர்வத்தை மேலும் தூண்டி தீவிரப்படுத்தியது.
இண்டியானா மாகாணத்தில் (Indiana State) உள்ள பர்டியு பல்கலைக்கழகத்தில் (Purdue University) இரண்டு வருடப் படிப்பை முடித்துவிட்டு, பென்சாகோலா நாவல் ஏர் ஸ்டேஷனில் (Pensacola Naval Air Station) கடற்படை வீரரானார். அப்பொழுது அவருக்கு 20 வயது.
பிறகு போர்ப் பயணங்களில் விமான வீரராகப் பங்கேற்றார். தொடர்ந்து நாசாவில் (NASA- - National Aeronautics and Space Administration) இணைந்து வான் பயண ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார் . இப்படி பல்வேறு நிலைகளில் அவர் தன்னைத் தயார் செய்துகொண்டார்.
1969 ஜூலை 16 ல் நிலவைத் தொட்டுவிடும் ஆசையில் அப்பல்லோ 11 (Apollo 11) என்ற விண்கலத்தில் பறந்தார். அவருடன் எட்வின் ஆல்டிரின் (Edwin Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) இருவரும் பயணித்தனர்.
இரண்டு நாட்கள் நிலவைச் சுற்றிவிட்டு, ஜூலை 20ல் தன் முதல் அடியை நிலாவில் வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.
