PUBLISHED ON : ஜன 25, 2016

'அடர்த்தியான மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருக்கிறது. அது ஒரு பாலைவனம். உங்களைச் சுற்றி எல்லாம் மெள்ள மூழ்கிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று தவிக்கிறீர்கள். அப்போது, மூன்று சிறகுள்ள ஓர் அன்னப் பறவை பறந்து வந்து உங்களைத் தன் முதுகில் ஏற்றி, பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிடுகிறது…'
இது போன்ற ஒரு கனவை நீங்கள் கண்டதுண்டா? பாலைவனத்தையும் பார்த்ததில்லை. அன்னப்பறவையும் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் இப்படி ஒரு கனவு!
ஓர் இரவுத் தூக்கத்தில் சிலர் ஆறு முறைகூட, கனவு காண்பதுண்டு. அந்த ஆறில் ஒன்றோ இரண்டோ மேலே சொன்னது போல, அவர் யோசித்துக்கூடப் பார்க்காத சம்பவங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
கனவு எங்கே இருந்து உருவாகிறது?
நம்முடைய நினைவுகள், உணர்ச்சிகள், யோசனைகள் போன்றவை, நம் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பதிந்திருக்கும். அந்தப் பகுதியில் இருந்துதான் கனவு உருவாகிறது. உங்கள் மனதில் பதிந்திருக்கும் விஷயங்களையும், நீங்கள் தூங்கப் போகும் முன்பு என்ன யோசித்தீர்களோ அதையும் இரவு நேரத்தில், உங்கள் மூளை போட்டுக் கலக்குகிறது. குலுக்குகிறது. அந்தக் கலவை ஒரு சினிமாக் காட்சி போல் ஓடுவதுதான் கனவு.
கனவில் வந்தது நிஜத்தில் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தந்த சமயம் நடப்பது, கனவில் வரக் கூடும். 'நமது உள்மன உணர்வுகளைத் தெரிந்துகொள்ள கனவுகள் நமக்கு உதவுகின்றன' என்று கனவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள்.
