PUBLISHED ON : ஜன 25, 2016

கனவுகளை வகைப்படுத்தி விடலாமாம். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கு, அவற்றில் சில வகைகளைப் பார்க்கலாம். அவை, எதை குறிக்கின்றன என்பதையும் தெரிந்துக்கொள்ளோம்!
கனவு : யாரோ துரத்துவது போல
அதன் பொருள்: ஏதோ ஒரு பயங்கரமான உயிர் உங்களைத் துரத்துவது போலக் கனவு வரும். இது, நிஜ வாழ்வில் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை ஒன்றை நீங்கள் சந்திக்காமல், தள்ளிப் போடுவதைக் குறிக்கும்.
கனவு : பறப்பது போல…
பொருள்: நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏதோ சிறப்புப் பெறப் போகிறீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை லீடர் போலப் பார்க்கலாம். பெற்றோர் உங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கலாம்.
கனவு : காணாமல் போய்விடுவது போல…
பொருள்: ஏதோ ஒன்றைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்களா? தவறான முடிவை எடுத்துவிடுவோம் என்று இப்போது பயப்படுகிறீர்கள். இதைத் தவிர்க்க, உங்கள் முன் இருக்கும் சாத்தியக் கூறுகளை அலசி ஆராயுங்கள்.
கனவு : கீழே விழுவது போல…
பொருள்: நீங்கள் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்கிறீர்கள். அவற்றில் எந்த வேலை உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று யோசியுங்கள். கனவில் கீழே விழும்போது அடிபடாமல் விழுந்தீர்களா? உங்கள் கடினமான கால கட்டத்தை சீக்கிரமே தாண்டிவிடுவீர்கள் என்று அர்த்தம்.
கனவு : அசைய முடியாதது போல…
பொருள்: ஏதோ பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னை எப்படி வந்தது, வருங்காலத்தில் இது போன்ற சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது எப்படி என்று யோசியுங்கள்.
கனவு : எதையோ காணாமல் போட்டுவிடுவது போல…
பொருள்: புது விளையாட்டிலோ, புதிய பொழுதுபோக்கிலோ நீங்கள் ஈடுபட விரும்பலாம். ஆனால், அதில் ஜெயிக்க முடியாதோ என்று உங்களுக்குத் தோன்றலாம். தன்னம்பிக்கைக் குறைவு! அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. தேடிப் பாருங்கள்!
கனவு: ஏதோ ஒரு விஷயத்துக்கு (பரீட்சைக்கோ பயணத்துக்கோ…) உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளாதது போல, அல்லது தாமதமாகிவிடுவது போல…
பொருள்: சீக்கிரம் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வேலை, அல்லது நீங்கள் பங்குகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி பற்றி நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் ஏற்கெனவே நன்கு தயார் செய்திருந்தால், உங்களுக்கு இப்போது பதற்றமாக இருக்கிறது என்று அர்த்தம். தயார் செய்யவில்லை என்றால் இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
40 நிமிடம் ஒரு கனவு அதிக பட்சம் நீடிக்கும் நேரம்.
6 வருடங்கள் வாழ்க்கையில் நீங்கள் கனவு காணும் மொத்த நேரம்.
நீங்கள் விழித்திருக்கும் போது இருப்பதைவிட, கனவு காணும்போது மூளை அதிக சுறுசுறுப்போடு வேலை செய்கிறது.
