PUBLISHED ON : ஜன 25, 2016

நீருக்கு தனித்த நிறம் கிடையாது. அதனால்தான், கடல், ஆறு, ஏரி, குளம் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமாக இருக்கும்! ஆனால், வினோதமாக ஓர் ஏரி முழுவதும் ரோஸ் மில்க் (Rose Milk)மாதிரி இளஞ்சிவப்பு (Pink - பிங்க்) நிறத்தில் இருக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி!
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள 'லேக் ஹிலியர்' (Lake Hillier) என்ற இடத்தில் இருக்கும் இந்த ஏரிதான் அது. இது செயற்கை நிறம் அல்ல. இயற்கையாகவே பிங்க் நிறத்தில் இருப்பதுதான் வியப்பு.
இந்த ஏரி எல்லாக் காலநிலைகளிலும் இதே நிறத்தில்தான் இருக்கிறது. இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினாலும் 'பிங்க்' நிறம் மாறுவதில்லை.
ஏன் இந்த 'பிங்க்' நிறம்?
* 'துனாலியல்லா சலினா' (Dunaliella Salina) எனப்படும் உப்பு நீர் ஊற்றுப் பாசிகள் இந்த ஏரியில் அதிகமாக இருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள்தான் ஏரியின் நிறத்திற்குக் காரணம். இந்தப் பாசிகள் ஒளியை உள்வாங்கிப் பிரதிபலிக்கின்றன. இதனால், இந்த 'பிங்க்' நிறம் வெளிப்படுகிறது.
* இந்த நுண்ணுயிரிகள், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. பாசிபோல வளரும் இந்த நுண்ணுயிரிகளை சேகரித்துப் பயன்படுத்தலாம்.
* ஆப்பிரிக்காவில் இருக்கும், செனகல் (Senagal) பகுதியின் ரெட்பா (Retba) ஏரியும் 'பிங்க்' நிறத்தில் காணப்படுகிறது.
* இந்த 'ரோஸ் மில்க்' ஏரியைப் பார்த்து ரசிக்கலாம்; பருக முடியாது.
