sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள்

/

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள்

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள்

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள்


PUBLISHED ON : மே 13, 2019

Google News

PUBLISHED ON : மே 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் எழுத்துகளில் துணையெழுத்துகள் உண்டு. ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஓர் எழுத்து ஒற்றை எழுத்தாகவே எழுதப்படும். தமிழ் மொழியில் அவ்வாறு எல்லா எழுத்துகளும் ஒற்றை எழுத்தாக எழுதப்படுவதில்லை.

க என்னும் உயிர்மெய்க் குறிலை எழுத ஒற்றை எழுத்து போதும்.கா என்னும் உயிர்மெய் நெடிலை எழுத 'க' என்னும் முதலெழுத்தும், அதையடுத்து ஒரு துணையெழுத்தும் தேவைப்படும். கா என்பது இவ்வாறு இரண்டு எழுத்துகளின் சேர்க்கைபோல் தெரியும். கொ என்பது ஓர் எழுத்தாகக் குறிக்கப்படுவதுதான். ஆனால், க என்னும் முதலெழுத்தின் முன்னும் பின்னும் இரண்டு துணையெழுத்துகள் சேர்ந்து மொத்தம் மூவகை எழுத்து வடிவங்களால் ஆகியிருப்பதைக் காண்க.

தமிழில் உள்ள துணையெழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அதனைப் பயன்படுத்தித்தான் நாம் எழுதுகிறோம். அவை என்ன என்று பார்ப்போம். ஒவ்வோர் எழுத்தின் அகர வடிவம், அதன் முதலெழுத்து வடிவமாகும். அதன் முன்னும் பின்னும் ஒட்டியும் கூட்டியும் எழுதப்படும் வடிவங்கள் துணையெழுத்துகளாகும்.

ஆ என்ற எழுத்தில் கீழே இழுக்கப்படுவது பிறைச்சுழி. சிலர் இதனைக் 'கீழ்ப்பிறை' என்றும் வழங்குவர்.

கா, சா, ஞா ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளை அடுத்து வருவது துணைக்கால்.

கெ, செ, நெ, தெ ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன் வருவது ஒற்றைக்கொம்பு

ஊ, கௌ, சௌ ஆகிய எழுத்துகளில் ள வடிவில் எழுதப்படுவது கொம்புக்கால். ஒரு கொம்பு போட்டு அதனையொட்டியே கால் வடிவம் இடுவதால் இப்பெயர்.

கே, சே, நே, கோ ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன்னால் வருவது, இரட்டைக்கொம்பு. இதனைக் 'கொம்புச்சுழி' என்றும் சிலர் கூறுவர்.

கை, சை, நை ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன்னால் வருவது, இணைக்கொம்பு, இதனைச் சங்கிலிக்கொம்பு என்றும், ஐகாரக் கொம்பு என்றும் கூறுவர். வேறு சிலர் இதனை இரட்டைக்கொம்பு என்றும் கூறினர். இதனை இரட்டைக் கொம்பாகக் கொள்வோர் கே, சே ஆகிய எழுத்துகளில் வரும் துணையெழுத்தினைக் கொம்புச்சுழி என்பர்.

ஏ என்னும் எழுத்தில் கடைசியாகக் கீழ்நோக்கி இழுக்கப்படுவது சாய்வுக்கீற்று.

பு, யு, வு ஆகிய எழுத்துகளில் முதலெழுத்தினை எழுதிய பின்னர், கீழ்நோக்கி ஒரு கோட்டினை இழுக்கிறோம். அதற்கு இறங்கு கீற்று என்று பெயர்.

கூ என்ற எழுத்தில் இருப்பது பின்வளை கீற்று. க என்ற எழுத்தோடு வளைவு போல் அமைத்தபின் படுகிடையாய்க் கீறுவது. கீற்றின் பின்னால் வளைவு இருப்பதால் அதற்குப் 'பின்வளை கீற்று' என்று பெயர்.

ணு, து, நு, ஞு, னு ஆகிய எழுத்துகளில் கீழே மடிப்பு வடிவத்தை எழுதி மேல்நோக்கிய கீற்றாக முடிக்கிறோம். இதற்கு 'மடங்கு ஏறு கீற்று' என்று பெயர். சிலர் 'மடக்கேறு கீற்று' என்றும் கூறுவர்.

ணூ, தூ, நூ, ஞூ, னூ ஆகிய எழுத்துகளில் அவ்வாறு மடக்கு ஏறு கீற்றினை எழுதி அதனைத் துணைக்கால் போட்டு முடிக்கிறோம். அவ்வாறு எழுதப்படுவது 'மடங்கு ஏறு கீற்றுக்கால்' எனப்படும்.

ஒரு விலங்கு மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் வால் கிளையிலிருந்து தொங்கும்தானே? அந்த வடிவத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு குரங்கினைக் கற்பனை செய்துகொள்வது சரியாக இருக்கும். கி, சி, தி, பி, ஞி, நி, ணி, னி போன்ற எழுத்துகளில் முதலெழுத்தின் மேல் அவ்வாறு ஒரு விலங்கின் வால்போல் தொங்கும் வடிவம்தான் எழுதப்படுகிறது. அதற்கு 'மேல் விலங்கு' என்று பெயர்.

விலங்கு என்றால் மேலே மட்டும்தான் அமர்ந்திருக்குமா?

தரையிலும் அமர்ந்திருக்குமே. தரையில் அமர்ந்திருக்கும் அணிலையோ நாயையோ கற்பனை செய்துகொள்ளுங்கள். மு, கு, ரு, ழு ஆகிய எழுத்துகளில் அவ்வாறு கீழே அமர்ந்த விலங்கின் வால் வடிவம் நினைவுக்கு வருகிறதா? அவ்வாறு எழுதப்படும் துணையெழுத்துகளுக்குக் 'கீழ்விலங்கு' என்று பெயர்.

கீ, சீ, தீ, பீ, ஞீ, நீ, ணீ, னீ ஆகிய எழுத்துகளில் அவ்வாறு தொங்கும் வாலின் விளிம்பு சுழிபட்டிருக்கிறது. மரக்கிளையில் அமர்ந்திருக்கும் விலங்கின் முனைசுருண்ட வால் வடிவம். இதற்கு 'மேல்விலங்குச் சுழி' என்று பெயர்.

மூ, ரூ, ழூ ஆகிய எழுத்துகளில் கீழ்விலங்கு வடிவத்தின் முனை சுழிபட்டிருக்கிறது. அவற்றுக்குக் 'கீழ்விலங்குச் சுழி' என்று பெயர்.

சூ, பூ, யூ, வூ ஆகிய எழுத்துகளில் முதலில் 'இறங்கு கீற்றினைக்' கீறி அதன்பின் கீழ்விலங்கு வடிவத்தினையும் எழுதி, முடிவில் சுழிக்கிறோம். அவற்றுக்கு 'இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி'என்று பெயர்.

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தமிழாசிரியர்களாலும் தமிழ்ப் புலவர் பெருமக்களாலும் கற்பிக்கப்பட்டவை. பிற்காலத்தில் துணை எழுத்துகளைப் பற்றிய அறிதல் தமிழ் மக்களிடையே அருகிப்போயிற்று.

தமிழாசிரியக் குழுமங்களால் நடத்தப்பட்ட சிறுபத்திரிகைகளில் புலவர் கு. கதிர்வேலு, புலவர் இராமசாமி போன்றோர், தமிழ்த் துணை எழுத்துகளின் வடிவம் பற்றி விரிவாக எழுதி உள்ளனர்.

- மகுடேசுவரன்






      Dinamalar
      Follow us