PUBLISHED ON : ஜூலை 11, 2016

சில வகைக் கனிகளின் வாசனையே ஈர்க்கும். இப்படிச் சொன்னதுமே உங்களுக்கு மாம்பழம் நினைவுக்கு வருகிறதா? குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது மாம்பழம்.
உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளையும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, பர்மா போன்ற ஆசிய நாடுகளில் இதன் விளைச்சல் அதிகம். மாங்கனி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகில் பாதியளவு மாம்பழம் இந்தியாவில்தான் விளைகிறது.
மாம்பூ சிறியதாகவும் கொத்துக் கொத்தாகவும் இருக்கும். மாம்பூ வாசமும் அலாதியானதுதான். மாம்பழம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு பச்சை நிறங்களில் பழுக்கும். வடிவங்களும் வேறுபட்டிருக்கும். முன்னூறுக்கும் அதிகமான ரகங்கள் இதில் உள்ளன.
இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம். பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும்தான்! பங்களாதேஷின் தேசிய மரமாகவும் மாமரம்தான் இருக்கிறது. மாம்பழத்தில் ஏ, சி, டி விட்டமின்கள் உள்ளன.
திருவிழாக்களிலும் சமயச் சடங்குகளிலும் மாமரத்தின் இலைகள் தோரணமாகக் கட்டப்படுகின்றன. மாம்பழத்தின் விதைகள் மருந்தாகவும் பயன்படுகிறது.
முகலாய மன்னர் அக்பர் ஒரு லட்சம் மரக்கன்றுகளை பீகாரில் தர்பங்கா (Darbhanga ) என்ற பகுதியில் நட்டார். அந்த இடம் இப்போது லக்கிபாக் (Lakhi Bagh) என்று அழைக்கப்படுகிறது.
