PUBLISHED ON : ஆக 05, 2024

பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதைப் போன்று கடல்வாழ் பாசிகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. கடற்பாசிகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன.
அகர் அகர், ஒரு கடற்பாசியாகும். இது உணவை ஜெல்லி பதத்திற்குக் கொண்டு வரப் பயன்படுகிறது. இதற்கு நிறமோ, மணமோ கிடையாது. இது கடலில் உள்ள சிவப்புக் கடல் பாசியின் செல்லுலார் சுவர்களில் இருந்து கிடைக்கும் கேலக்டான் பாலிசாக்கரைடுகளின் வகை கொண்ட பாசியாகும். கிரேசி, லேரியா, அசிரோசா உள்ளிட்ட பாசிகளிலிருந்தும் அகர் அகர் கிடைக்கிறது. இது ரொட்டி, பாலாடைக் கட்டி முதலியவற்றைப் பதப்படுத்தவும், இறைச்சி, மீன் முதலியவற்றை டின்களில் அடைத்துப் பதப்படுத்தவும் பயன்படுகின்றது.
ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துகள் அதிகம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. நீரிழிவு, புற்றுநோய், போன்ற நோய்களுக்கு இது மிகவும் உகந்த மருந்தென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
கிப்னியா நிடிபிகா என்னும் கடல் பாசி பலவகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும் தலைவலிக்கும் மருந்தாகின்றது. துர்வில்லியா என்னும் கடல்பாசி தோல் நோயைக் குணப்படுத்துகிறது. உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டைச் சீராக்க உதவிடும்.
இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்கப் பாசி பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்.