PUBLISHED ON : டிச 19, 2016

சங்க காலத்தில், பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில் தலையாலங்கானத்துப் போர் மிகப் பெரியது. தலையாலங்கானம் என்ற இடத்தில் நிகழ்ந்ததால், இப்பெயர் வந்தது.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு எதிராக, சேரனும் சோழனும் ஐந்து வேளிர்களைச் கூட்டாய்ச் சேர்த்துக் கொண்டு படையெடுத்து வந்தனர். நெடுஞ்செழியன், அப்போது இளைஞன். சின்னஞ்சிறியவனான செழியனை வென்று, பாண்டிய நாட்டைக் கூறுபோட்டுக் கொள்வது என்று, சேர அரசன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், சோழ அரசன் கிள்ளிவளவனும் திட்டம் போட்டனர். இந்த கூட்டணி மட்டுமே பாண்டியனை வீழ்த்தப் போதுமானதாக இருக்காது என்று அவர்கள் கருதினர். காரணம், நெடுஞ்செழியன் வயதில்தான் இளையவன். அவன் படையோ பல போர்கள் கண்ட மூத்த வீரர்களையும், தளபதிகளையும் கொண்டிருந்தது. அதனால், திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐந்து வேளிர் மன்னர்களை கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். இந்தக் கூட்டுப் படை, பாண்டிய நாட்டின் எல்லைக்கு வந்து சேர்ந்தது.
இதைக் கண்டு, நெடுஞ்செழியன் சினந்து எழுந்தான். தன் குல வழக்கப்படி, பொய்கையில் நீராடி, வேப்பந்தளிர் சூடிக்கொண்டான். போர்க்களத்திற்கு நேரடியாகப் புகுவோர் அணிகின்ற உழிஞைக் கொடியையும் மார்பில் அணிந்து கொண்டான். தம் படைத்தலைவர்களை மட்டும் போருக்கு அனுப்பாமல், நெடுஞ்செழியனே நேரடியாய்க் களமிறங்கினான். அவ்வாறு போரில் இறங்கிய பாண்டியன், வஞ்சினம் கூறினான். போருக்குச் செல்லும் அரசர்கள் தாம் வெற்றிபெறுவதற்காகச் சூளுரை கூறிப் பொங்குதலே, வஞ்சினம் எனப்படுவது. 'பகைவர் ஏழ்வரையும் முடித்தலை சிதைத்து, என் கொடியின் கீழ்க்கொண்டுவராவிடில், என் குலமக்கள் என்னைக் கொடிய வேந்தன் என்று கூறட்டும்; தமிழ்ச் சங்கம் என்னைப் பாடாது நிற்கட்டும்; பிச்சையிடமுடியாத வறுமை என்னைச் சூழட்டும்' என்பது பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினம்.
இப்பெரும்போர் சோழநாட்டில், குடவாயிலுக்கு அருகே தலையாலங்கானம் என்னும் ஊரில் நடைபெற்றது. போரில் ஏழு மன்னர்களுக்குள் ஒற்றுமையின்மை தோன்றிற்று. ஒருவருக்கொருவர் முன்பு சேர்ந்து போரிட்டதில்லை. அது பாண்டியனுக்கு சாதகமாக அமைந்தது. வேளிர்கள் புறமுதுகிட்டு ஓடினர். சேரமான் பின்வாங்கினான். சோழன் மண்டியிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டான். பாண்டிய நாட்டுப் படை, ஏழு அரசர்களின் வெண்கொற்றக் குடையைக் கைப்பற்றியது. பெரும்பொருளோடும், பண்டங்களோடும் நெடுஞ்செழியனின் படை, பாண்டிய நாட்டுக்குத் திரும்பியது. அதுமுதல் பாண்டிய மன்னன் 'தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்' என்று அழைக்கப்பட்டான். அப்போது தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவராக இருந்த மாங்குடி மருதனார், பாண்டியனைப் போற்றிப் பாடினார். நக்கீரரும், நெடுஞ்செழியனைப் போற்றிப் பாடியுள்ளார். இடைக்குன்றூர்க்கிழாரின் பாட்டு ஒன்றும் உள்ளது. நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி ஆகிய நூல்களில், இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தலையாலங்கானத்துப் போர் நிகழ்ந்த இடம், தற்போதைய திருவாரூர் மாவட்டம், குடவாயில் வட்டத்தில் உள்ள சிமிழி என்ற ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்குகிறது. அந்த இடம் தற்போது 'தலையாலங்காடு' என்று அழைக்கப்படுகிறது.
- காவிரிமைந்தன்

