PUBLISHED ON : டிச 19, 2016

பழந்தமிழகத்தில், ஏரி, குளம், கிணறு வெட்டுவதும், பராமரிப்பதும் பொது அறமாக கருதப்பட்டது. ஏரி, குளங்களை பராமரிக்க, நிலம் தானமாக வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவீரம் என்னும் குளத்தை வெட்டுவதற்கு, ராஜராஜ சோழனின் ஆட்சியில் உயர் அதிகாரியாக இருந்த காரஞ்சை நம்பிரான் கிரமவித்தன் என்பவர், தானம் வழங்கியுள்ளார். இந்த தகவல், மேக்கிரிமங்கலம் என்ற சிற்றூரில் (நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகே) உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 'ஏரியைப் பராமரிப்பவர் யாராக இருந்தாலும், அவரின் பாத மண்ணை, நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்வேன்' என, கிரமவித்தன், ஒரு கல்வெட்டில் கூறியிருக்கிறார்.
நீர் நிலைகளை உருவாக்கும் இந்த செயலை, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் சிலரும் கடைப்பிடித்துள்ளனர்.
ஆங்கிலக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக, 1796ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர் பிரான்சில் வொயிட் எல்லீஸ். இங்கிலாந்தில் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அரசராக இருந்தபோது, சென்னையில் பொருளாளர் பதவி வகித்தார் எல்லீஸ். 23 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார். தமிழ் மொழியைக் கற்றவர்; திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மொழி, வரலாறு, தொல்லியல் துறைகளில் ஆய்வுப் பணிகள் செய்துள்ளார்.
கடந்த 1818-ம் ஆண்டு, சென்னையில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, 27 கிணறுகளை இவர் வெட்டியுள்ளார். கிணறு வெட்டியது தொடர்பான கல்வெட்டில், 'இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டுக்கு உறுப்பு' என்னும் குறளை செதுக்கி வைத்தார்.
ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், மலை, வலிமையான கோட்டை ஆகியவை, ஒரு நாட்டுக்கு முக்கியமான அங்கங்களாகும் என்பதே இக்குறளின் பொருள்.
அவர் வெட்டிய கல்வெட்டில், தமிழ்மரபுப்படி, சூரிய சந்திர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
'பாரெலா நிழற்று பரியரிக் குடையோன் வாரியுஞ்
சிறுக வருபடைக் கடலோன்'
என்று கல்வெட்டுப் பாடல் தொடங்குகிறது. சங்க காலத்தில், கல்வெட்டுகளில் மன்னர்களை வாழ்த்தி, புகழ்ந்து கூறப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தைப் பின்பற்றி, ஜார்ஜ் மன்னரைப் போற்றி, இந்தக் கல்வெட்டுப் பாடல் தொடங்குகிறது.
இக்கல்வெட்டு, தொல்லியல் துறையினரால், ராயப்பேட்டையில் கண்டறியப்பட்டது. இது, மதுரை திருமலை நாயக்கர் மகால் வளாகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- சரபோஜி

