
வாழ்ந்த காலம்: 16.12.1770 - 26.03.1827
பிறந்த ஊர்: பான், ஜெர்மனி.
சாதனை: சிம்பொனி வழங்கிய இசை மேதை
மொஸார்ட் எனும் மாமேதை போல, தன் மகனும் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில், கால் கடுக்க நிற்கவைத்து இசைப்பயிற்சி தந்தார் பீத்தோவனின் தந்தை ஜோகன். கால் வலிக்கிறது என்று அழுதால் அடிப்பாராம். கை விரல்களில் பிரம்பால் அடித்து இசையைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறார். கற்று முடித்த பிறகு, 17 வயதில் இசை நிகழ்ச்சி நடத்த, மேற்கத்திய இசைக்குப் பிரபலமான வியன்னா சென்றார்.
மாணவர்களுக்கு பியானோ இசை கற்பித்தும் இருக்கிறார். எண்ணற்ற அற்புதமான இசைக் கோவைகளைத் தந்த பீத்தோவன், ஒரு சில இசைக் கோவைகளை உருவாக்க எட்டு ஆண்டுகள் கூட எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இருபத்தி ஆறு வயதில் பீத்தோவனின் காதுகளில் மணியடிப்பது போல சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. டின்னிடஸ் என்ற நோயால், காது கேட்கும் திறனை இழந்தார். வருமானத்துக்கு வேறு வழியில்லாமல், தன்னுடைய இசைக்கோவைகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். முழுமையாகக் காது கேட்காமல் போனபிறகு, அவர் நடத்திய முதல் இசை நிகழ்ச்சி, பெருந்தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகும், மூன்லைட் சொனாட்டா, எரோய்கா போன்ற மிகப்புகழ் பெற்ற இசைக்கோவைகளை உருவாக்கினார்.
பல வலிகளைச் சுமந்த பிறகே, பீத்தோவனின் இசை, காலம் கடந்து மொஸார்ட்டின் கோவைகளுக்கு இணையாக இன்றும் கொண்டாடப்படுகிறது!

