PUBLISHED ON : செப் 25, 2017

கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள், இத்தனை நாட்கள் வரை நன்றாக இருக்கும் என அதன் வாழ்நாளை குறிப்பிட, பொருளின் மீது அது தயாரிக்கப்பட்ட நாளையோ அல்லது அதை உபயோகிக்கக்கூடிய கால வரையறையையோ குறிப்பிடுவது வழக்கம்.
நிறுவனத்திற்கு நிறுவனம் இதில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுவதால், வாடிக்கையாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். எத்தனை நாட்கள் வரை ஒரு பொருளை உபயோகிக்கலாம் என்ற சந்தேகம் வந்தால்கூட, எதற்கு வம்பு என்று உணவுப் பொருட்களை குப்பையில் போட்டுவிடுகின்றனர். இது உலகெங்கும் அதிகம் நடக்கிறது.
இதன் மூலம் ஏற்படும் உணவுப் பொருள் வீணடிப்பைத் தவிர்க்க, இப்போது மிகப்பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்களான கெலாக்ஸ், நெஸ்லே போன்ற நிறுவனங்களும், பெரிய விற்பனையாளர்களான வால்மார்ட் போன்ற கடைகளும் ஒரே மாதிரியான லேபிள்களை உணவுப் பொருட்களின் மீது பயன்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளன.
இதன்படி, தயாரிப்பு தேதிக்குப் பதிலாக, எந்தத் தேதி வரை உணவுப் பொருளை சாப்பிடலாமோ அந்தத் தேதி மட்டுமே குறிப்பிடப்படும். இம்முயற்சியை வாடிக்கையாளர்களுக்கான அமைப்பு சி.ஜி.எஃப். (Consumer Goods Forum - CGF) பாராட்டியுள்ளது. கூடவே, இந்தப் பொதுவான குறியீட்டுக்கு முறைக்கு, எல்லா நிறுவனங்களும் மாறினால் குறிப்பிட்ட சதவீத உணவு வீணாவதைத் தவிர்த்துவிட முடியும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

