PUBLISHED ON : மே 29, 2017

சென்னையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் பகுதி, கண்ணகி நகர். ஏழை எளியவர்கள், குடிசைவாசிகள் பலருக்கும், அரசாங்கம் வழங்கிய புகலிடம் இது. ஆனால், வசதிகளோ, வாய்ப்புகளோ மிகமிகக் குறைவு. கண்ணகி நகர் மக்களுக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களால், அவர்கள் ஒரு தனித்தீவாகவே மாறிப் போய்விட்டார்கள்.
இந்தப் பகுதியில், ஒரு வங்காளத் தம்பதி மிகப்பெரும் கல்விப் பணி ஆற்றிவருவது தெரிந்து, அங்கு போனோம். கெளஸ்தவ் சென்குப்தாவும் அவருடைய மனைவி லில்லியும் இணைந்து, குழந்தைகளுக்கான நல்ல எதிர்காலத்தை வடிவமைக்க உதவி வருகிறார்கள். கண்ணகி நகரில், 2012ம் ஆண்டு முதல், இவர்கள் களப்பணி செய்து வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம்:
எப்படி தமிழ் கத்துக்க ஆரம்பிச்சீங்க?
இந்த ஊர்லேயே நான் 10 வருஷத்துக்கு மேல இருக்கேன். ரொம்ப நல்லா தமிழ் பேசத் தெரியாது. ஆனாலும், முயற்சி செஞ்சு கத்துக்கிட்டேன். என்னோட மனைவியும் இப்ப தமிழ் பேச கத்துக்கிறாங்க.
கண்ணகி நகர் பகுதியை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
நான் அந்தப் பகுதியைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். சுனாமிக்கு அப்பறம் அந்த இடம் சின்னாபின்னமாச்சு. சுனாமியிலிருந்து தப்பிச்சவங்கதான், அங்க அதிகமா இருக்காங்க. அவங்கள சந்திச்சப்ப, பெண்களும், குழந்தைகளும் ரொம்ப கஷ்டப்படறதை, நானும், என் மனைவியும் பார்த்தோம். அவங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணிச்சு. காசு, பணம் கொடுத்து உதவி செஞ்சா, அது அவங்களுக்கு எவ்வளவு நாள் நீடிச்சு நிற்கும்னு தெரியல. அதனால, குழந்தைங்க மூலமா ஏதாச்சும் பண்ணலாம்னு யோசிச்சோம்.
குழந்தைகள் மூலம் கண்ணகி நகரை எளிமையாக அடைய முடிஞ்சுதுனு சொல்லலாமா?
நிச்சயமா. நாம சமூகத்துக்கு ஏதாச்சும் பண்ணணும்னு நினைச்சா, அதை குழந்தைங்க கிட்ட இருந்துதான் தொடங்கணும். இதை நாங்க எங்களுடைய மன சந்தோஷத்துக்காக ஆரம்பிச்சோம். ஆனா, இப்ப இது, எங்க வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்க்கையையும் மாத்திடுச்சு.
எந்த மாதிரியான பிரச்னைகளை அந்தப் பகுதி குழந்தைங்க சந்திக்கறாங்க?
நிறைய பிரச்னைகள் இருக்கு, குறிப்பா வீடுகளிலே, எந்நேரமும் சண்டைதான் நடக்கும். சண்டையைப் பார்த்துவளரக்கூடிய குழந்தைங்க, தேவையற்ற வார்த்தைகளை கத்துக்கறாங்க. அதுக்கான அர்த்தம் தெரியுமான்னு கூட தெரியாது. ஆனா, அவங்க அதை இயல்பா பயன்படுத்துவாங்க. கேக்கற நமக்கு அதிர்ச்சியா இருக்கும்.
நீங்க கொண்டுவந்த மாற்றங்கள் என்னென்ன?
குழந்தைங்க படிக்கிறாங்க, படிக்கலை என்பது இரண்டாவது விஷயம். எல்லார்கிட்டையும் முரண்டு பிடிக்காம அன்பா நடந்துக்கறாங்க. அவங்க கெட்ட வார்த்தைகள் பேசறதை நிறுத்தியிருக்கிறதே பெரிய விஷயம். இவங்களோட நடவடிக்கைகளை பார்த்து, பெற்றோர்கள் கிட்டயும் மாற்றத்தை உணர முடியுது.
இது எப்படி சாத்தியமாச்சு?
சின்ன வயசுல நமக்கு ஓவியப் புத்தகங்கள் கொடுப்பாங்க. அதுல வரையும்போது, கலர் பண்ணும்போது, குழந்தைகளோட மூளைக்கு நிறைய வேலை இருக்கும். இது அவங்கள ஒரே இடத்துல உட்கார வெச்சு, கவனம் சிதறமா இருக்க உதவும். என்னோட வாழ்க்கையில கிரியேட்டிவிட்டியோட ஓவியங்களை வரைய தொடங்கினப்ப, எனக்குள் நல்ல மாற்றங்கள் வந்ததை உணர முடிந்தது. என்னைப் புரிஞ்சுக்க முடிஞ்சது.
இதே புரிதலோடதான் கண்ணகி நகர் குழந்தைங்ககிட்டயும் போனேன். கணக்கு, அறிவியல், மற்ற பாடங்களைச் சொல்லிக் கொடுக்கறதுக்கு முன்னாடி, ஓவியங்கள் மூலமா அவங்களுக்கு ஒரு புதிய உலகத்தை அடையாளம் காட்டினேன். இன்னிக்கு அவங்க ஒவ்வொருவரும், தங்களுடைய தனிப்பட்ட திறன்களை வளர்க்க ஆரம்பிச்சு இருக்காங்க.
படிப்படியா அவங்க படிக்கிறதுக்கும் எங்களால முடிஞ்சத செய்றோம். இவங்கள மாத்தறதுக்கு, கல்விதான் சரியான ஆயுதம்னு எனக்குத் தோணிச்சு. யுனிஃசெப் மாதிரியான நிறுவனங்கள், இந்தக் குழந்தைகளோட திறன் வளர்ச்சிக்கு பக்கபலமா இருக்காங்க. நாங்களும் கண்ணகி நகர் மக்களோட அன்பாலும், மாற்றத்தாலும் வளர்ந்துகிட்டு இருக்கோம்.
கெளஸ்தவ் சென்குப்தா, சென்னையில் இருக்கும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர். இந்தியாவில் இளைஞர்களுக்காக நடக்கும் பல கருத்தரங்குகளுக்கு ஆலோசகர். இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருடைய மனைவி லில்லியுடன் இணைந்து, 'இங் லிங்க்' என்ற சேவை மையத்தை நடத்தி வருகிறார். இதன்மூலம் கண்ணகி நகர் மாணவ, மாணவியருக்கு, கல்விக்கான உதவித் தொகை பெற்றுத் தருவதோடு, இலவசமாக வகுப்புகள் எடுப்பதன் மூலம், அப்பகுதி குழந்தைகளைக் கனவுகளோடு உருவாக்குகிறார்.
