PUBLISHED ON : அக் 15, 2018

ஆல்ஃப்ரெட் நோபல்
21.10.1833 - 10.12.1896
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
2018ஆம் ஆண்டுக்கான இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மாமேதைகளுக்கான மாபெரும் கௌரவமாக இந்தப் பரிசு கருதப்படுகிறது. பிற துறைகளுடன் அமைதிக்காகவும் ஒரு பரிசு தர வேண்டும் என நினைத்தவர் யார் தெரியுமா? டைனமைட் என்னும் ரசாயன வெடிமருந்தைக் கண்டுபிடித்து பல பேர் மரணமடையக் காரணமாக இருந்த ஆல்ஃப்ரெட் நோபல்!
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்வீடிஷ் மொழிகளைப் பேச, எழுத, மொழியாக்கம் செய்யும் திறமை அவரிடம் இருந்தது. தந்தை கண்டுபிடிப்பாளராகவும் பொறியியலாளராகவும் இருந்ததால், இவரும் பொறியியலில் ஆர்வம் கொண்டார். இராயல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்து முடித்து, தந்தையின் ஆய்வகப் பரிசோதனைகளில் உதவினார். வேதியியல் படிப்பது அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. வாயுக்களின் அளவைக் கண்டறியும் வாயுமானியை 17 வயதில் கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தினார். அடுத்ததாக, நைட்ரோகிளிசரின் ஆராய்ச்சியில் தீவிரமாகி, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1867இல் டைனமைட் என்னும் வெடிமருந்து உருவானது. சுரங்கங்கள், கட்டட இடிப்புகள் போன்ற வேலைகள் அவரைத் தேடி வந்தன. போரிலும் டைனமைட் பயன்படுத்தப்பட்டது. போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராகி, ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரானார்.
அப்போதுதான், 1888இல் பிரெஞ்ச் நாளிதழ்கள், நோபல் இறந்ததாகக் கருதி, தவறான ஒரு செய்தியை வெளியிட்டன. அதில், 'அப்பாவி மக்களைக் கொல்லும் வெடிமருந்தைக் கண்டுபிடித்து, செல்வம் குவித்த மரண வியாபாரி மரணமடைந்தார்' என்று எழுதியிருந்தது. மனமுடைந்த அவர், வரலாற்றில் தன் பெயரை நல்ல விதமாகப் பதிக்க விரும்பினார். அதற்காக, தான் சம்பாதித்த செல்வத்தில் பெரும் பகுதியுடன் 'நோபல்' அறக்கட்டளையை நிறுவினார்.
அவர் கண்டுபிடித்தது அழிவுக்கான ஆயுதமாக இருந்தாலும், அவர் விரும்பியதென்னவோ, அமைதியைத்தான்!
