PUBLISHED ON : அக் 15, 2018

அக்டோபர் 15, 1931 - அப்துல் கலாம் பிறந்த நாள்
அறிவியலாளர்; இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார். 'ஏவுகணை நாயகன்' என்று புகழப்படுகிறார். பாரத ரத்னா உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.
அக்டோபர் 16, 1945 - உலக உணவு நாள்
உணவு குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக, ஐ.நா. சபையின் உணவு & வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்னை, பசி, வறுமைக்கு எதிராகப் போராடுவதே இந்த நாளின் நோக்கம்.
அக்டோபர் 17, 1992 - உலக வறுமை ஒழிப்பு நாள்
ஒரு நாட்டில் அடிப்படை வாழ்க்கைத் தரம் இல்லாத மக்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். வறுமை, ஏழ்மை நிலையை ஒழிக்க, இந்த நாள் ஐ.நா. சபையால் கடைப்பிடிக்கப்படுகிறது.
அக்டோபர் 18, 1956 - மார்டினா நவரத்திலோவா பிறந்த நாள்
மூன்று வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கிய செகோஸ்லோவேக்கியா வீராங்கனை. 18 தனி நபர், 40 இரட்டையர் கிராண்ட் ஸ்லாம், 9 விம்பிள்டன் பட்டங்கள் வென்றிருக்கிறார்.
அக்டோபர் 19, 1910 - சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த நாள்
நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் ஆராய்ச்சியாளர். 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற தொகுப்பு நூல் வெளியிட்டார். பத்மவிபூஷண் உட்பட பல விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
அக்டோபர் 19, 1888 - நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள்
சுதந்திரப் போராட்ட வீரர். எளிய தமிழில் தேசபக்திப் பாடல்கள் பாடினார். 'தேசியக்கவி' எனப் போற்றப்பட்டு, தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். 1971இல் பத்மபூஷண் விருது பெற்றார்.
