PUBLISHED ON : அக் 15, 2018

“விடாக் கண்டன் கொடாக் கண்டன்” என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஒன்றினை விட்டுத்தரவே மாட்டாதவன் விடாக் கண்டன். எதனையும் கொடுக்கவே மாட்டாதவன் கொடாக் கண்டன்.
விடாத கண்டன், கொடாத கண்டன் என்று சொல்லியிருக்கலாமே. ஏன் விடாக் கண்டன், கொடாக் கண்டன் என்று சொன்னார்கள்? சொற்களைச் சொல்லிச் செல்கையில் நன்கு வழுக்கிச் செல்ல வேண்டும். அதன்பொருட்டு இறுதியில் தொற்றிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டுச் சொல்வார்கள். சொல்லின் இறுதி (த) கெட்டு விடுகிறது. இறுதிக்கு ஈறு என்று பெயர். ஈறுகெட்டது (த). ஈறு கெட்டதால், சொல் எஞ்சி 'விடாத' என ஆயிற்று.
விடாத கண்டன், கொடாத கண்டன் என்ற தொடர்களைப் பாருங்கள். முதலில் ஒரு வினைச்சொல்லும், அடுத்து ஒரு பெயர்ச்சொல்லும் வந்திருக்கின்றன. வினையும் பெயரும் அடுத்தடுத்து வந்தால் அங்கே வலிமிகுதல் இல்லை.
பாடிய பாட்டு
கூறிய சொற்கள்
வந்த காசு
வாழ்த்திய பெரியோர்
மேலே உள்ள சொற்றொடர்களில் முதல் சொற்கள் வினைச்சொற்கள். இரண்டாம் சொற்கள் பெயர்ச்சொற்கள். வினையும் பெயரும் அடுத்தடுத்து வந்தன. அங்கே வலிமிகவில்லை. மேலுள்ளவை நேர்மறையான, உடன்பாட்டுத் தொடர்கள். அவை எதிர்மறையாகவும் பலவிடங்களில் பயன்படுத்தப் படுவதுண்டு.
பாடாத பாட்டு
கூறாத சொற்கள்
வராத காசு
வாழ்த்தாத பெரியோர்
இங்கே எதிர்மறைப் பொருளில் பயன்பட்டிருக்கின்றன. அங்கேயும் வலிமிகல் இல்லை. ஆனால் பழமொழியில் வந்ததைப்போல் எதிர்மறையில் தொடங்கும் வினைச்சொல்லானது ஈறுகெட்டு எஞ்சி நின்றால் அங்கே கட்டாயம் வலிமிகும்.
பாடாப் பாட்டு
கூறாச் சொற்கள்
வராக் கடன்
வாழ்த்தாப் பெரியோர்
விடாக் கண்டனும் கொடாக் கண்டனும் எப்படி வந்தார்கள் என்பது தெரிந்து விட்டதா ?
- மகுடேசுவரன்
