PUBLISHED ON : அக் 15, 2018

ஒரு நூலை வாங்கலாமா, வாசிக்கலாமா என்று நீங்கள் எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?
சிலர் தலைப்பைக்கொண்டு தீர்மானிப்பார்கள். சிலர் விலையைக்கொண்டு தீர்மானிப்பார்கள், பெரும்பாலானோர் ஆசிரியருடைய பெயரைக்கொண்டு தீர்மானிப்பார்கள்.
அதாவது, புகழ்பெற்ற, நன்கு எழுதக்கூடிய ஆசிரியருடைய நூல் என்றால், உடனே வாங்கிவிடுவார்கள், ஆர்வத்துடன் படிப்பார்கள். புதிய ஆசிரியருடைய நூல் என்றால், கொஞ்சம் தயங்குவார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னால், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெரும் எழுத்தாளர் இருந்தார். அவருடைய படைப்புகளை வாசகர்கள் ஆர்வத்துடன் வாசித்து மகிழ்ந்தார்கள், பாராட்டினார்கள்.
அப்போது, அவருக்குள் இந்தக் கேள்விகள் எழுந்தன. 'ஒரு நூல் மக்களால் வாசிக்கப்படக் காரணம் என்ன? நூலின் சிறப்பா? அல்லது, எழுதியவருடைய புகழா? ஒரு புகழ்பெற்ற ஆசிரியர் சிறப்பில்லாத நூலொன்றை எழுதினாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு விடுவார்களா? புகழில்லாத ஒருவர் நல்ல நூலொன்றை எழுதினாலும் மக்கள் அதை நிராகரித்து விடுவார்களா?'
இந்தக் கேள்விகளுக்கு விடைகாண்பதற்காக, அவர் ஒரு பரிசோதனை செய்துபார்க்கத் தீர்மானித்தார். 'இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் பாடல்களையெல்லாம் என்னுடைய உண்மைப்பெயரில் வெளியிடப்போவதில்லை. புனைப்பெயரில் வெளியிடப்போகிறேன். மக்களைப் பொறுத்தவரை, இவை யாரோ புதியவருடைய பாடல்கள். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இப்பாடல்களை ஏற்றுக்கொண்டால், இவை உண்மையில் சிறப்பானவை என்று பொருள்.'
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த புனைப்பெயர்: பரிதிமாற்கலைஞன்.
உண்மையில் இது புதிய பெயரே இல்லை. சூரியநாராயண சாஸ்திரி என்ற தன்னுடைய பெயரைத்தான் இப்படித் தூய தமிழில் மொழிபெயர்த்து ஒரு புனைப்பெயரை உருவாக்கியிருந்தார். 'சூரியன்' என்றால் தமிழில் 'பரிதி', 'நாராயணன்' என்ற இறைவனுடைய பெயர் தமிழில் 'மால்', 'சாஸ்திரி' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் 'கலைஞன்'. இவை மூன்றையும் சேர்த்துப் 'பரிதிமாற்கலைஞன்' என்ற பெயரை உருவாக்கினார் அவர்.
இந்தப் புதிய பெயரில் அவருடைய பாடல்கள் வெளியாகின. யாரோ புதியவர் எழுதியிருக்கிறார் என்று எண்ணாமல் மக்கள் அவற்றை வாங்கிப் படித்தார்கள். வியந்து பாராட்டினார்கள். இதைக்கேட்டுச் சூரியநாராயண சாஸ்திரியார் மகிழ்ந்தார். தன்னுடைய புகழ்பெற்ற பெயருக்காக அல்லாமல், கவிதைகளின் தரத்துக்காகத்தான் மக்கள் அவற்றை வாசித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டார்.
'தனிப்பாசுரத் தொகை' என்ற பெயரில் வெளியான இப்பாடல்களை ஜி.யூ. போப் மிகவும் ரசித்தார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பினார். இந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவையும் சேர்க்கப்பட்டன. இந்தச் சுவையான பரிசோதனையால் கிடைத்த ஒரு நல்விளைவு, 'சூரியநாராயண சாஸ்திரியார்' என்ற பிறமொழிப்பெயரை மறந்து அவர், 'பரிதிமாற்கலைஞராகவே' மாறிவிட்டார். தமிழ்மொழியின் வரலாறு, பாவலர் விருந்து, நாடகவியல் உள்ளிட்ட பல முக்கியமான நூல்களை எழுதிய பரிதிமாற்கலைஞர், பதிப்பாளராகவும் திகழ்ந்தார். அவருடைய எழுத்துகள் நல்ல தமிழ்நடைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.
இனி நீங்கள் ஒரு புதிய நூலைக் கண்டால், அதன் தரத்தைக்கொண்டு மதிப்பிடுங்கள், ஆசிரியர் புகழ்பெற்றவரா, இல்லையா என்று பார்த்துத் தீர்மானிக்க வேண்டாம். பல புதிய எழுத்தாளர்கள் அருமையாக எழுதுகிறார்கள். 'பரிதிமாற்கலைஞர்' போல் புனைப்பெயருக்குள் இருந்துகொண்டு உங்களைப் பரிசோதிக்கிற சிறந்த, அனுபவமிக்க எழுத்தாளர்களும் இருக்கக்கூடும். ஆகவே, நல்ல எழுத்து எங்கிருந்து வந்தாலும் வாசித்து ஆதரியுங்கள்.
- நாகா
பயிற்சிக்கு
1. பரிதிமாற்கலைஞருக்கும் தனித்தமிழ் இயக்கத்துக்கும் என்ன தொடர்பு?
2. தனித்தமிழ் இயக்கம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுங்களேன்!
