PUBLISHED ON : நவ 06, 2017

இந்த ஸ்ரீகாந்தை கிரிக்கெட் வீரர் என நினைக்க வேண்டாம். இவர் பாட்மின்டன் வீரர்.
25 வயது நிரம்பிய ஸ்ரீகாந்த், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றியைக் குவித்து வருகிறார். சூப்பர் சீரிஸ் முதல் முன்னணி போட்டிகள் வரை விளையாடி வருகிறார். இவருடைய ஆட்டத்தைப் பார்த்து அனைவரும் மிரளுகிறார்கள்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். எளிமையான விவசாய குடும்பம். தந்தை மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் அவர் நினைத்த மாதிரியான உயரத்திற்குப் போக முடியவில்லை.
ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், முதல் மகன் நந்தகோபாலை பாட்மின்டனில் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்தும் பாட்மின்டன் விளையாட ஆரம்பித்தார். மகன்களின் கனவுகளை ஊக்கப்படுத்தினார் அப்பா. இதனால் இரண்டு சகோதரர்களும் சிறுவயது முதலே முறையான பயிற்சி பெறஆரம்பித்தார்கள்.
தொடக்கத்தில் ஜூனியர் பிரிவில் இருக்கும்போது, இரட்டையர் பிரிவில் விளையாடி வந்தார் ஸ்ரீகாந்த். 2011 நடந்த ஜூனியர் காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெண்கலமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று நாடு திரும்பினார். அதன்பின் ஜூனியர்ஸில் இருந்து, சீனியர்ஸ் பிரிவுக்கு மாறும்போது இவருடைய பயிற்சியாளர், ஒற்றையர் பிரிவுக்கு மாற்றினார். அப்படி “ஒற்றையர் பிரிவில் மாற்றாமல் இருந்திருந்தால் எதிர்காலம் எப்படி இருந்திருக்கும் என்பதே தெரியவில்லை” என ஒரு பேட்டியில் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
வீட்டினருகே இருந்த நகராட்சி விளையாட்டு மைதானம் தான் அவருடைய பாட்மின்டன் கனவுக்கு அடித்தளம். ஏழு வயதிலிருந்து விளையாடத் தொடங்கிய ஸ்ரீகாந்த், படிப்படியாக பள்ளி, கல்லூரி, மாவட்டம், மாநிலம், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, பறந்து விரிந்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவருடைய கனவின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும், உழைப்பும் தான். அதேபோல் பயிற்சியாளர் கோபி, அண்ணன் நந்தகோபால் இருவரும் இவருடைய நேர்த்தியான ஆட்டத்திற்கு உதவினர்.
தினமும், காலை நான்கு மணி முதல் பயிற்சி. முதலில் காலை எழுந்திருப்பது சிக்கலாக இருக்குமாம். ஆனால் பயிற்சியாளர் 4.30 மணிக்கே வந்துவிடுவார். அவரே சீக்கிரம் வரும்போது, வெற்றிபெற வேண்டிய தான் சீக்கிரம் வந்தால் என்ன என்று ஒரு வாரத்தில் அவருடைய பயோ க்ளாக்கை மாற்றியமைத்து கொண்டார். இலக்கை அடைய வேண்டும் என்பதில் அவர் காட்டிய தீவிரம் தான் அவரை உயர்த்தியது.
25 வயதில் இவருடைய ஆட்டம் அசாத்தியமானது என பல உலக பாட்மின்டன் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், பயிற்சியாளர் கோபி தான்.
2014-ல் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதிலிருந்து மீண்டு வந்ததே பெரிய விஷயம். அதன் பின் இவருடைய ஃபார்ம் எப்படி இருக்கும் என்பது பற்றி பலரும் சந்தேகம் கொண்டனர். ஆனால் அனைவருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக அவருடைய அடுத்தடுத்த ஆட்டங்கள் அமைந்தன.
இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்று உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார் சீனாவின் லின் டான். அவரை வீழ்த்தி அனைவரையும் அசத்திவிட்டார். தனக்கு எதிரில் விளையாடுபவர்கள் யார் என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல், ஆட்டத்தை நன்றாக விளையாட வேண்டும் என்பதில் கவனமாக இருந்ததால்தான் லின் டானை தோற்கடிக்க முடிந்தது என்றார். இப்போது உலக போட்டிகளில் வெற்றிபெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
வீழ்த்த முடியாதவர்கள் என்று யாரும் இல்லை, முறையான பயிற்சியும், ஆர்வமும் இருந்தால், யாரையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்கிறார் ஸ்ரீகாந்த்.
