PUBLISHED ON : நவ 12, 2018

அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவரி, உவா, ஓதம், ஓலம், கடல், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், சலதரம், சலதி, சுழி, தாழி, திரை, துறை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீரகம், நிரதி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேலை... இந்தச் சொற்கள் அனைத்துக்கும் என்ன ஒற்றுமை?
இவை யாவும் ஒரே பொருளைத்தான் குறிக்கிறது. 'கடல்' என்று நாம் பொதுவாக அழைக்கும் அந்தப் பெரிய நீர்ப்பரப்புக்குத்தான் புலவர்கள் பழம்பாடல்களில் இத்தனை சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்னும்போது, தமிழின் சொல்வளத்தை எண்ணி வியக்கிறோம்.
இச்சொற்களின் பொருளை, வேரை ஆராய்ந்தால், இன்னும் வியப்பு அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, 'தொன்னீர்' என்ற சொல், 'தொன்மையான நீர்ப்பரப்பு' என்ற பொருளில் கடலுக்குப் பொருந்துகிறது, 'முந்நீர்' என்ற சொல், மூன்றுவகை நீர்களின் சேர்க்கை என்ற பொருளில் வருகிறது: ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர், அதாவது, மழை போன்ற வேறு செயல்களால் கிடைக்கும் நீர்.
'கடல்' என்ற சொல்லையே புலவர்கள் பலவிதமான அடைமொழிகளுடன் இணைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக:
* அலைகடல், திரைகடல் - அலைகள் நிறைந்தது
* மறிகடல் - அலைகள் மடிந்து வீசுவது
* ஆழ்கடல் - ஆழமானது
* செழுங்கடல் - செழிப்பானது
* கருங்கடல் - கருத்த நிறமுடையது
* பெருங்கடல் - அளவில் பெரியது
கடலில் பயணம் செய்வதற் கேற்ற மரக்கலங்களும் அந்த நாளில் இருந்துள்ளன. சரக்குகளை ஏற்றிவரும் பெரிய கப்பல்களைப் பற்றிய குறிப்புகளையும் காண்கிறோம். இதன்மூலம், இந்தியாவைத் தாண்டிப் பல நாடுகளுடனும் தமிழர்கள் வணிகத்தொடர்பில் இருந்துள்ளார்கள்.
அன்பின் ஐந்திணைகளில் ஒன்றான 'நெய்தல்', கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளைப்பற்றிப் பேசுகிறது. அங்கு வாழும் மீனவர்களுடைய வாழ்க்கைமுறையைப் பற்றிப் பல விரிவான பாடல்கள் உள்ளன. கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் தாவரங்கள், பறவைகளைப் பற்றிய குறிப்புகளையும் காண்கிறோம்.
தமிழகத்தின் கணிசமான பகுதி கடற்கரையாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் கடலின் தாக்கம் ஆழமாக இருக்கிறது.
- என். சொக்கன்
