PUBLISHED ON : நவ 12, 2018
காவிரி வளத்தால் சோழநாடு 'நீர் நாடு', 'புனல் நாடு' என்று அழைக்கப்பட்டது. சோழநாடு சோறுடைய நாடாகப் புகழப்பட்டது. சோழர்களை காவிரியின் தந்தையர் என்றும் அழைத்தனர். காவிரியை, சோழனின் புதல்வி என்று புலவர்கள் அழைத்து மகிழ்ந்தனர். சோழனின் சிறப்புக்குரிய அந்தக் காவிரி, எப்போதும் வற்றாத வளம்கொழிக்கும் நதியாக இருந்தது என்பதை, 'மணிமேகலை' நூலில் வரும் ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
'கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை'
கோள்களின் நிலை மாறுபட்டு, மழை பெய்யாது போனாலும், மழை பெய்யாத சூழ்நிலை பலகாலம் நீடித்தாலும், தன்னுடைய நிலைதிரியாது, எப்போதும் வற்றாது வளம் கொழிக்கும், நீர் பாயும் நிலையுடைய நதியாக இருந்தது காவிரி என்கிறது மணிமேகலை.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலை,
'புள்தேம்ப புயல்மாறி வான் பொய்ப்பினும்
தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி'
என, வர்ணிக்கிறது.
நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட பறவைகள் வருந்துமாறு, மழை பெய்யாது வானம் பொய்த்தாலும், தான் பொய்யாகாமல் மலையில் தொடங்கி, கடலில் சென்று கலக்கும் காவிரி ஆறு, தான் பாயும் நிலத்திற்கும் வளம் சேர்க்கும் என்று குறிப்பிடுகிறது.
