PUBLISHED ON : நவ 12, 2018

ஒரு சொல்லின் கடைசி எழுத்து வலி மிகுதலில் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. எல்லா எழுத்துகளும் சொல்லுக்குக் கடைசி எழுத்தாகத் தோன்றுவதில்லை. எடுத்துக்காட்டாக, வல்லின மெய்யெழுத்துகளான க், ச், ட், த், ப், ற், ஒரு சொல்லுக்குக் கடைசி எழுத்தாகத் தோன்றுவதில்லை. ஆனால், வல்லின உயிர்மெய்களில் பல சொல்லுக்கு ஈற்றில் தோன்றுகின்றன. அவற்றில் டு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் தமிழில் எண்ணற்றவை.
ஆடு, கூடு, நாடு, வீடு, உதடு, முரடு
ஆறு, நூறு, சேறு, கிணறு, கயிறு, வயிறு
இப்படி எண்ணற்ற பெயர்ச் சொற்கள் 'டு' என்ற எழுத்தையும் 'று' என்ற எழுத்தையும் கடைசி எழுத்தாகக் கொண்டு தோன்றுகின்றன.
டு, று ஆகிய எழுத்துகளைக் கடைசி எழுத்துகளாகக் கொண்ட பெயர்ச் சொற்களை அடுத்து இன்னொரு பெயர்ச்சொல் வந்து சேரும் நிலை ஏற்பட்டால் ஒற்று இரட்டிக்கும். டு என்பது 'ட்டு' என்று ஆகும். று என்பது 'ற்று' என்று ஆகும்.
ஆடு என்பதை அடுத்து கால் என்ற பெயர்ச்சொல் வருவதாகக் கொள்வோம்.
ஆடு + கால் = ஆட்டுக்கால் என்று ஆகிவிடும். ஆடுகால் என்று எழுதுவதில்லை. ஆடு என்ற பெயர்ச் சொல்லோடு கால் என்ற பெயர்ச்சொல் சேர்ந்தபோது, 'டு' இரட்டித்து 'ட்டு' ஆனது. அதன் பிறகு கால் என்ற சொல் வந்ததால், 'க்' என்னும் வலிமிகுந்து 'ஆட்டுக்கால்' ஆனது.
ஆனால், ஆடுகளம் என்று எழுதுகிறோம். ஏன்? இங்கே ஆடு என்பது வினைச்சொல். அது மட்டுமன்றி ஆடுகளம் என்பது வினைத்தொகை. அதனால் ஒற்று இரட்டிக்கவில்லை. வலி மிகவுமில்லை.
இரண்டும் பெயர்ச் சொற்களாக இருக்கின்றனவா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.
ஆடு + கால் = ஆட்டுக்கால்
கூடு + பறவை = கூட்டுப்பறவை
வீடு + சமையல் = வீட்டுச்சமையல்
முரடு + காளை = முரட்டுக்காளை
அவ்வாறே று என்று முடியும் பெயர்ச் சொற்களை அடுத்து, இன்னொரு பெயர்ச்சொல் வந்தால் 'ற்று' என்று இரட்டித்து வருமொழிக்கேற்ப வலி மிகும்.
ஆறு + படுகை = ஆற்றுப்படுகை
நூறு + கணக்கில் = நூற்றுக்கணக்கில்
சேறு + புண் = சேற்றுப்புண்
கிணறு + தண்ணீர் = கிணற்றுத்தண்ணீர்
கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
டு, று ஆகிய எழுத்துகளில் முடியும் பெயர்ச் சொற்களுக்கு வலி மிகும்.
-- மகுடேசுவரன்
