PUBLISHED ON : செப் 05, 2016

விண்வெளியில், பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஓர் ஆய்வு நிலையம், சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station). இதன் நீளம் 109 மீட்டர். இது ஏறத்தாழ ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்துக்குச் சமமானது. இதன் எடை 4,20,000 கிலோ. ஏறத்தாழ 320 கார்களுக்கு இணையான கனம்! இவ்வளவு பெரிய எடையைத் தூக்கிக்கொண்டு, இந்த விண்வெளி நிலையம் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. ஒரு நாளில் 16 முறை. இதற்குள் இருக்கும் விஞ்ஞானிகள் ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கிறார்கள்!
இந்த விண்வெளி நிலையத்தில் இருக்கும் அமைப்புகள், ஏறத்தாழ 18 லட்சம் வரிகள் நீளும் மென்பொருள் குறியீடுகளால் இணைக்கப்பட்டவை. தரைத்தளக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்வெளி நிலையத்தைத் கட்டுப்படுத்த வேண்டும் அல்லவா? அதற்கான மென்பொருள் குறியீட்டின் நீளம், 33 லட்சம் வரிகள்! 'உலகின் மிகவும் சிக்கலான, அதே சமயம் மிகவும் துல்லியமான தொழில்நுட்பப் படைப்பு' என்ற, புகழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத்தான். இவ்வளவு பெரிய அமைப்பை இயக்குவதற்குத் தேவையான மின்சாரத்தை, சூரிய சக்தி தகடுகள் உற்பத்தி செய்கின்றன.
இதைக் கட்டமைக்க ஆன பொருட்செலவு 15,000 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவரை மனிதன் உருவாக்கிய பொருட்களிலேயே, மிகவும் விலை உயர்ந்த பொருள், இந்த சர்வதேச விண்வெளி நிலையம்தான் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் சொல்கிறது.
இவ்வளவு பெரிய திட்டத்தை, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து செயல்படுத்துகின்றன. பாதிக்கும் மேற்பட்ட செலவு அமெரிக்காவுடையது. உலக நாடுகளுடன் இணைந்து இதை உருவாக்கும் திட்டத்தை, 1984ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் முன்வைத்தார். இந்தத் திட்டத்துக்கு அவர் வைத்த பெயர், 'சுதந்திரம்'. இதன் நிர்மாணிப்பு வேலைகள் 1990களில் தொடங்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விண்வெளியில் முதல் பகுதி நிறுவப்பட்டது, 1998ல். விண்வெளி வீரர்கள் முதன்முறையாகக் குடிபுகுந்த வருடம், 2000ஆம் ஆண்டு. அப்போது தொடங்கி, விண்வெளி வீரர்கள் தொடர்ச்சியாகத் தங்கி ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வீரர்கள் தங்கி வேலை பார்க்கும் அமைப்பு, 6 அறைகள் கொண்ட ஒரு வீட்டின் அளவில் இருக்கும்.
பூமியில் இருந்து, விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்ல, வெறும் எட்டே நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், விண்வெளியை அடைந்த உடனேயே, விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்துவிட முடியாது. மணிக்கு 27,600 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தை, விண்கலம் சரியான கோணத்தில் நெருங்கி, அதோடு பொருந்தினால்தான், விண்வெளி வீரர்கள் உள்ளே நுழைய முடியும். இதற்கு 3 நாட்கள்கூட ஆகுமாம்.
