PUBLISHED ON : செப் 05, 2016

வீட்டு அலங்காரப் பொருட்களில், பூ ஜாடிக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. ஒரு மருந்து பாட்டிலையும், டிஷ்யூ பேப்பரால் செய்த பூக்களையும் கொண்டு, எளிமையான அழகிய பூ ஜாடி செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
1. சிரப் பாட்டில் - 1.
2. ஸ்வெட்டர் பின்னும் நூல் (2 நிறங்களில்).
3. டிஷ்யூ தாள்கள் - 2.
4. பச்சை நிற ஃபிளோரல் டேப், அலுமினியக் கம்பிகள். (ஸ்டாக்கிங் பூக்கள் செய்வதற்கான பொருட்கள் இவை)
5. பைப் கிளீனிங் வயர்கள் - 2. (கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)
பாட்டிலைச் சுற்றிப் பசை தடவி நூலை ஒட்ட வேண்டும். ஒரு நூல் இழைக்குப் பின்னர் இன்னொரு நூல் இழை என, இடைவெளி விடாமல் ஒட்டவும். இரண்டு நிற நூல்களையும், பட்டிகள் போல ஒன்றை அடுத்து இன்னொன்று வரும் வகையில் ஒட்டிவிட்டால், அழகான ஜாடி தயார்.
அடுத்து, டிஷ்யூ தாளை விசிறி போல மடிக்க வேண்டும். இரு புறங்களிலும், நீளமான பட்டிகள் கிடைக்கும் வகையில் கத்தரிக்க வேண்டும்.
மத்தியில் அலுமினியக் கம்பி வைத்து, படத்தில் இருப்பது மாதிரி முறுக்கிவிட வேண்டும். பட்டிகளை விரித்துப் பூ வடிவம் செய்துகொள்ள வேண்டும்.
கம்பியை ஃபிளோரல் டேப்பால் சுற்றி, காம்பு செய்ய வேண்டும்.
இரண்டு பூக்கள் செய்து ஜாடிக்குள் செருகிவிடுங்கள். பைப் கிளீனிங் வயரை சுருள் வடிவில் நெளித்து, அவற்றையும் ஜாடிக்குள் செருகிவிடுங்கள்.
உங்கள் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்க, அழகிய பூ ஜாடி தயார்.
- ஓவியா டீச்சர்
