PUBLISHED ON : செப் 05, 2016

தமிழ் சரித்திரக் கதைகளின் முன்னோடியாகிய நான், தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தேன். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி தேசியக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றேன். சிறையில் நான் எழுதிய முதல் நாவல் 'விமலா' சுதந்தரன் பத்திரிகையில் வெளியானது.
விடுதலைக்குப் பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை செய்தேன்.
அதன் பிறகு 'நவசக்தி' பத்திரிகையில் சேர்ந்தேன். புதிதாகத் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன்' இதழுக்கு 'ஏட்டிக்குப் போட்டி' என்ற நகைச்சுவைக் கட்டுரையை அனுப்பினேன். அதன் பிறகே, என் மனைவி கல்யாணி மற்றும் என் பெயரை இணைத்த ஒரு புனை பெயரில் விகடனுக்குத் தொடர்ந்து எழுதினேன். தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற பெயர்களிலும் எழுதிவந்தேன். பின்னர், ராஜாஜியின் 'விமோசனம்' பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்தேன்.
உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்று, விடுதலையானதும் ஆனந்த விகடனில் சேர்ந்தேன். நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக ஒரு பத்திரிகை தொடங்கினேன். அதுமட்டுமின்றி 'மீரா' திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், 'காற்றினிலே வரும் கீதம்' உள்ளிட்ட பாடல்களையும் எழுதினேன்.
சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு என பல நூல்களை எழுதியிருக்கிறேன். எனது 'பார்த்திபன் கனவு' நூல் தமிழின் முதல் சரித்திர நாவல். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான 'சிவகாமியின் சபதம்', சமூகப் புதினமான 'அலைஓசை' ஆகிய நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நான் எழுதி, மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' நாவல், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றது. முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் என, பன்முகத் தன்மை கொண்டவன். எனது படைப்புகள் எல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 'அலையோசை' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு: செப்டம்பர் 9, 1899
மறைவு: டிசம்பர் 5, 1954
