தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எழுத்தறிவித்தவர்கள்

எழுத்தறிவித்தவர்கள்

எழுத்தறிவித்தவர்கள்


PUBLISHED ON : செப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒண்ணாப்பு (ஒன்றாம் வகுப்பு என்று பொருள்): கிளி அந்தோணி டீச்சர். 'இந்த ராணிப் புத்தகத்த வீட்டுல குடுத்துட்டு வாடா' என்று அவர் கொடுத்த புத்தகத்தில், 'பழக்கடையில் பாம்பு அடிக்கும் சத்தம் கேட்டது' என்கிற வாக்கியத்தைப் படித்துக் குழம்பியிருக்கிறேன். வளர்ந்த பிறகு, அது, 'புழக்கடையில் பம்பு அடிக்கும் சத்தம்' என்று புரிந்தது.

ரெண்டாப்பு: சுட்டுமணி வாத்தியார். அவர் என்னை அடிக்கக் கையை ஓங்குவதை, எனக்கு சல்யூட் வைக்கிறார் என்று நினைத்து பதிலுக்கு சல்யூட் வைத்திருக்கிறேன்.

மூணாப்பு: அப்பாவுக்கு மாற்றலாகி டெல்லி நகரம். முதல் நாளே, ஆசிரியர் த்ரிவேதியோ த்விவேதியோ, கரடி என்பதை ஹிந்தியில் எழுதச் சொன்னார். பெல்ட்டை வேறு கழற்றி கையில் வைத்திருந்தார். அத்தோடு பள்ளிக்குப் போகவில்லை. நேராக அல்லிநகரத்தில் மறுபடி மூணாப்பே சேர்ந்துவிட்டேன்.

நாலாப்பு: தேவசகாயராஜன். 'நான் சினிமால நடிச்சா எனக்கு எந்த ஹீரோயின் பொருத்தம்?' என்று கேட்டார். பாடுவார். நன்றாகப் பாடினாரா என்று தெரியவில்லை.

அஞ்சாப்பு: ராமலட்சுமி டீச்சர். என் மேல் கொள்ளைப் பிரியம். என்னை சினிமாவுக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறார் (மாட்டுக்கார வேலன்). அதற்குக் கைமாறு செய்வதற்காக, முதல் ரேங்க் மட்டுமே வாங்கினேன்.

ஆறாப்பு: கார்த்தியாயினி டீச்சர். என் மேல் கொள்ளைப் பிரியத்தைவிடக் கொஞ்சம் கூடுதல் பிரியம் காட்டினார். பள்ளி வேலை நாளில் அவருக்குப் பிறந்த தினம் என்பதைத் துப்பறிந்து கண்டுபிடித்துவிட்டேன். சேமிப்பில் இருந்து அவருக்கு ஒரு சர்பத் வாங்கிக்கொடுத்தேன். எழுபது பைசா. அதில் பாதிக் காசை எனக்கு ரொக்கமாகக் கொடுத்துவிட்டார்.

ஏழாப்பு: சீனிவாசன். கண்ணனைக் குறிக்கும் பெயர். பாடவேளையின் நடுவே பக்கத்தூருக்குச் சென்று மாடு பிடித்துக்கொடுத்துவிட்டு வருவார். வந்து, பேசிய மாணவர்களை செமர்த்தியாக அடிப்பார்.

எட்டாப்பு: தமிழ் வாத்தியார், ராமியாணம் என்று உச்சரிப்பார். தன் பெயரைக்கூட 'கன்சாமி' என்பார்.

ஒம்பதாப்பு: தமிழாசிரியர் தங்கவேல். தமிழிலும் ஆங்கிலத்திலும் என் ஆர்வத்தைக் கவனித்தார். மற்ற பாடங்களில் நூத்துக்கு நுப்பத்தஞ்சு என்றாலும் என்னை வகுப்புத் தலைவனாக ஆக்கினார்.

பத்தாப்பு: குருமூர்த்தி வாத்தியார். வேறு ஆசிரியர்கள் வராத பாடவேளைக்கு இவர் வந்தால், அந்தந்த சப்ஜெக்டை, மனப்பாடமாக நடத்துவார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிப் புலவர். கல்வி அதிகாரிகள் வருகை தரும் நேரங்களிலும், மாணவர்களுக்கு ஒத்திகை எல்லாம் நடத்தாமல் வழக்கம் போலவே பாடம் நடத்தினார்.

பதினொண்ணு: ரகுபதி ராகவன். செய்யுள் பகுதிகளைப் பாட்டாகப் பாடுவார். ஒரு நவராத்திரி விழாவில் அவர் உபன்யாசம் செய்தபோது, நான் தபேலாவில் தாளம் தட்டினேன்.

பன்னண்டு: சங்கரப்பன். ஆங்கில ஆசிரியர். பாரதியார் விழாவில் உரையாற்றப் போனார். அந்த உரையைத் தயாரித்துத் தரும்படி என்னிடம் கேட்டதை மறக்க முடியாது.

- ரமேஷ் வைத்யா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us