PUBLISHED ON : பிப் 13, 2017

பண்டைய தமிழகத்தில், இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் மிகுதியாய் இல்லை. மண்ணுக்குள் அடக்கம் செய்யும் வழக்கமே இருந்தது. தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து, மண்ணிட்டு மூடுகிறார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல், புதைத்தல் என்று கூறுகிறோம். ஆனால், பழந்தமிழகத்தில் இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.
அக்காலத்தில், போர்கள் ஏராளம். போரில் இறந்தவர்களும் ஏராளம். அரசனும் அரசனோடு அவனுடைய படைவீரர்களும் இறந்துகிடப்பர். கொடிய நோய்கள் பரவினாலும், மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்துவிடுவர். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள முதியவர்களும் இறப்பு நேராமல் முதுமை மிகுந்து முடங்கிக் கிடப்பர். இவர்களை எல்லாம் அடக்கம் செய்வதற்கு 'முதுமக்கள் தாழி' என்னும் மண் பாண்டத்தைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது.
இறந்தவர்களின் உடலை ஒரு பெரிய பானைக்குள் வைத்து, மண்ணுக்குள் அடக்கம் செய்தார்கள். அவ்வாறு இறந்தவரை அடக்கம் செய்யப் பயன்பட்ட மண்பானையே 'முதுமக்கள் தாழி' எனப்பட்டது. தாழி என்றால் வாயகன்ற பெரிய மண்பானை என்று பொருள். 'முதுமக்கள்சாடி' என்றும் அப்பானை அழைக்கப்பட்டது. திருவெண்காட்டுப் புராணத்தில் 'மொய்த்த முதியோர்க்கு முதுமக்கள்சாடி பல வைத்த குலதீரனே' என்னும் வரி வருகிறது. இன்றும் மண்குடுவைகளைச் 'சாடி' என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.
முதுமக்கள்தாழிகள் ஏழடி உயரம் வரைக்கும் செய்யப்பட்டிருக்கின்றன. ஓரடி அளவிலான சிறு தாழிகளும் உண்டு. சிறு தாழிகள், இறந்த குழந்தைகளைப் புதைப்பதற்குப் பயன்பட்டன. ஏழடி உயர முதுமக்கள்தாழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து மண்ணில் புதைத்தனர். இறப்பு நேராமலும் அசைவின்றியும் முடங்கிக்கிடந்த முதியவர்களை முதுமக்கள்தாழிகளில் அமரவைத்து மண்ணில் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஒருவர் இறந்த பிறகே, அந்நாளிரவில் சூளையை மூட்டித் தாழிசெய்யும் பணி ஆரம்பிக்கும். முன்பாகவே செய்து வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லை.
முதுமக்கள் தாழி குறித்து, புறநானூற்றின் 228ம் பாடல் முழுமையாகக் கூறுகிறது. “குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்” என்னும் சோழ மன்னன் போரில் இறந்தபோது, ஐயூர் முடவனார் என்னும் புலவர் முதுமக்கள்தாழி செய்வதைத் தொழிலாகக் கொண்ட 'மூதூர்க் கலஞ்செய் கோ' என்பவரிடம் “எம் மன்னனின் பெருமைக்கேற்ற முதுமக்கள் தாழியை நீ செய்துவிட முடியுமோ?” என்னும் பொருளில் அமைந்த பாடலொன்றைப் பாடியுள்ளார்.
'கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பரூஉப்புகை
அகலிரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே யாங்கு ஆகுவை கொல்!
“கலம் செய்வதில் தலைவனே... அகன்று பரந்த மூதூரில் வாழ்கின்ற கலஞ்செய் கோவே! நீ மூட்டிய சூளையிலிருந்து தோன்றும் புகை, இருள் கவிந்ததுபோல் வானத்தைக் கறுப்பாக்கியது. நீ அவ்வாறு சூளையிட்டுத் தாழிசெய்கிறாய்... உன்னால் எம்மன்னனின் புகழுக்கும் பெருமைக்கும் நிகரான தாழியொன்றைச் செய்ய முடியுமா என்ன!” என்று அப்பாடல் தொடங்குகிறது. நிலமெங்கும் பரவிநிற்கும் படையை உடையவன், புலவர்களால் பொய்யில்லாமல் புகழப்பட்டவன், செம்பியர்கோன். கொடி விளங்கும் யானையின்மீது தோன்றுபவன். அவன் தேவருலகம் சென்றான். அவனுடைய புகழுக்கும் பெருமைக்கும் நிகரான தாழியைச் செய்ய முனைந்தால் மலையளவு மண்ணை வைத்துச் செய்யவேண்டியிருக்குமே...” என்பது அப்பாடலின் பொருள்.
போரில் இறந்த வீரர்கள் பலர் ஒரே தாழியில் இட்டுப் புதைக்கப்பட்டனர் என்று தெரிகிறது. இறந்தவர்களின் உடலை நீராட்டி அத்தாழிக்குள் சம்மணமிட்டவாறு அமரச் செய்து அவர்களைச் சுற்றி அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் ஆடை அணிகலன்களையும் இட்டனர். சம்மணமிட்டு வைக்கப்பட்ட உடலைச் சுற்றி தானியங்களால் நிரப்பி அதன்மேல் பொருட்களை வைத்தனர். உள்ளேயே ஓர் அகல் விளக்கையும் ஏற்றி வைத்து அதன்பின் தாழியின் வாய்ப்பகுதியை மூடினர். பிறகு அத்தாழியை மிகப்பெரிய குழிக்குள் இறக்கி, சுற்றி மணல்போன்ற மென்மையான மண்ணை இட்டு மூடினர். மூடிய பரப்பின்மீது பெரிய கற்களை இட்டனர்.
இறந்தோர் உடலை ஆளற்ற இடத்தில் ஐந்தாறு நாள்கள் கிடத்தி வைத்து, அவ்வுடலின் உண்ணத்தக்க தசைப்பகுதிகள் விலங்குகளாலும் பறவைகளாலும் உண்ணப்பட்டபின், எஞ்சிய எலும்புகளை முதுமக்கள் தாழியில் இட்டுப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கொடுமணல், பூம்புகார், அரிக்கமேடு, மாங்குடி, திருக்கழுக்குன்றம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், எண்ணற்ற முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான முதுமக்கள்தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மகுடேசுவரன்

