
உ. வே. சாமிநாத ஐயர்
காலம்: 19.2.1855 - 28.4.1942
பிறந்த இடம்: உத்தமதானபுரம், கும்பகோணம்
தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, காலத்தால் சிதைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்த காலம் அது. தன் சொந்த முயற்சியால் அவற்றை எல்லாம் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததைப் பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சாக்கிக் காப்பாற்றியவர் நம் தமிழ்த் தாத்தா.
சிலப்பதிகாரத்தை முதன்முதலில் உரையுடன் பதிப்பித்தார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றையும் பதிப்பித்தார். அவர் மட்டும் தேடிப் போகாமல் இருந்திருந்தால், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சங்க இலக்கியங்களைப் பற்றி நாம் அறியாமலே இருந்திருப்போம்.
இவர் தொகுத்துத் தந்த நூல்களால்தான் தமிழ் மொழியை, 'செம்மொழி' என்கிறோம். 100க்கு மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3000க்கு அதிகமான ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்தார். 'இவரின் அடிநிழலில் இருந்து நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி என்னிடம் எழுகிறது' என்று மகாத்மா சொல்லியிருக்கிறார்.
இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
* சங்க நூல்கள்
* பிற்கால நூல்கள்
* இலக்கண நூல்கள்
* காவிய நூல்கள்
தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து, பிறகு ஆறு ஆண்டுகள் மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றார். கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1940ம் ஆண்டு 'என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். அதில், தமிழ் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்த நூல் முழுமையடைவதற்கு முன்பே இந்த உலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், நம் தமிழ்மொழி போல் என்றும் குறையாத புகழுடன் 'தமிழ்த் தாத்தா' நம்மோடு இருக்கிறார்.
பட்டங்கள்:
* 1906 - மகாமகோபாத்யாய
* 1925 - தக்ஷினாத்ய கலாநிதி
* 1932 - தமிழ் இலக்கிய அறிஞர்

