PUBLISHED ON : அக் 02, 2017

மொட்டை மாடியில் தோட்டம் போட்டு, காய்கறிகள் வளர்ப்பது இப்போது அனேக இடங்களில் நடந்து வருகிறது. அதுமாதிரியான தோட்டத்தை நாமும் பார்த்திருப்போம். ஆனால் மொட்டை மாடியிலேயே நெல் பயிரிட முடியும் என்றால் ஆச்சரியம்தானே... மங்களூரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் கிருஷ்ணப்ப கௌடா என்பவர், தனது வீட்டு மொட்டை மாடியில் 2014ம் ஆண்டு முதல் நெல் சாகுபடி செய்து வருகிறார். 1200 சதுர அடி பரப்புள்ள இவரது மொட்டை மாடித் தோட்டத்தில் இதுவரை 30 முதல் 50 கிலோ நெல் வரை பயிராகியுள்ளது. கிருஷ்ணப்பா இதுவரை தனது விளைச்சலை வெளியில் விற்றதில்லை. நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமே பகிர்ந்து அளிக்கிறார்.
விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரான கிருஷ்ணப்பா, நெகிழிப் பைகளில் மண், தேங்காய் நார், இயற்கை உரம், பசுஞ்சாணி முதலியவற்றைப் போட்டு, அதில் நெல்லைப் பயிரிடுகிறார். நெல் மட்டுமல்லாது முள்ளங்கி, மஞ்சள், கரும்பு என்று பல்வேறு வகைகளை பயிரிட்டாலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு வகைப் பயிரை மட்டுமே வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். கர்நாடக தோட்டக்கலை அதிகாரிகள் இவரது மொட்டைமாடி விவசாயத்தை நேரில் வந்து பார்த்து, பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். உள்ளூர் சானலில் மட்டும் வந்த இவரது சாதனை இப்போது, பல பத்திரிகைகளில் வெளிவந்து, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

