PUBLISHED ON : அக் 07, 2019
சொற்களுக்கிடையே வல்லொற்று மிகுவதைத்தான் இதுவரை 'வலி மிகுதல்' பகுதியில் கற்றுக்கொண்டோம். க், ச், த், ப் ஆகிய நான்கு ஒற்றெழுத்துகளும் மிகுவதைப் பற்றியது அது. வல்லொற்று மிகுவதைப்போலவே, மெல்லொற்றிலும் வலி மிகும். அதை 'மெலி மிகுதல்' என்பர். அதாவது, சொற்களுக்கிடையே மெல்லின மெய்யெழுத்துகள் மிகுவது.
ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்கள். ங, ஞ, ண, ந, ம, ன மெல்லினம் என்போம். மெல்லின ஒற்றுகளும் சொற்களுக்கிடையே மிகுந்து தோன்றும். 'ங'கரத்தில் தொடங்கும் சொல் 'ஙனம்' என்பது. அதற்கு 'இடம்' என்று பொருள். 'ஙனம்' என்னும் சொல் அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளோடும், வினா எழுத்துகளான எ, யா ஆகியவற்றோடும் சேர்கையில், ங் என்னும் மெல்லொற்று மிகும்.
அ + ஙனம் = அங்ஙனம்
இ + ஙனம் = இங்ஙனம்
எ + ஙனம் = எங்ஙனம்
யா + ஙனம் = யாங்ஙனம்
குறில் எழுத்தை அடுத்து ய் என்ற மெய்யெழுத்து வரும் ஈரெழுத்துச் சொற்கள் உள்ளன. மெய், பொய், நெய், செய் போன்றவை அத்தகைய சொற்கள். அச்சொற்களை அடுத்து ஞ, ந, ம வரிசையில் தொடங்கும் சொற்கள் வந்தால், அங்கே உரிய மெல்லொற்று தோன்றும்.
மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்
மெய் + நிலை = மெய்ந்நிலை
மெய் + மயக்கம் = மெய்ம்மயக்கம்
மேற்காணும் எடுத்துக்காட்டுகளில் மெய் என்ற சொல்லை அடுத்து, எந்த மெல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்ததோ, அந்த மெல்லெழுத்து மிகுந்துவிட்டது. மேலும், சில எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கும்.
செய் + நன்றி = செய்ந்நன்றி
பொய் + முகம் = பொய்ம்முகம்
மெய் + நிகர் = மெய்ந்நிகர்
செய்நன்றி, பொய்முகம், மெய்ஞானம் என மெல்லொற்று மிகாமல் எழுதினால் அது பிழையாகும். செய்நன்றி என்பது வினைத்தொகைதான். வினைத்தொகைக்கு வலி மிகுவதில்லை. ஆனால், இவ்விடத்தில் மிகுந்தாக வேண்டும்.
ஐகார ஓரெழுத்துச் சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தாலும், அங்கே மெல்லொற்று மிகும். கை, பை, மை, தை போன்றவை ஐகாரத்தில் அமைந்த ஓரெழுத்துச் சொற்களாகும். அவற்றுக்கும் மெலி மிகும்.
கை + மாறு = கைம்மாறு
தை + மாதம் = தைம்மாதம்
பை + நிறை = பைந்நிறை
ன, ண ஆகிய மெல்லின எழுத்துகளில் சொற்கள் தொடங்குவதில்லை என்பதால், அவ்விரண்டு எழுத்துகளுக்கும் வலி மிகாது.
- மகுடேசுவரன்
