PUBLISHED ON : அக் 07, 2019

பரிதிமாற்கலைஞர், கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த நேரம். பாடங்களைச் சுவையான முறையிலும் ஆழமாகவும் விவரித்து மாணவர்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்றுவந்தார்.
இவரது கற்பிக்கும் முறையால், பல மாணவர்களுக்குத் தமிழின் மீது ஆர்வம் பிறந்தது. வாசிப்பிலும் எழுத்திலும் சிறந்து விளங்கினார்கள். அப்படிப்பட்ட மாணவர்களைத் தன்னுடைய இல்லத்துக்கே அழைத்துப் பாராட்டுவார் பரிதிமாற்கலைஞர். அவர்களுக்கு 'இயற்றமிழ் மாணவர்கள்' என்று பெயர் சூட்டினார்.
இவ்வாறு பரிதிமாற்கலைஞரிடம் சிறப்புப் பெயர் பெற்றவர்கள் பன்னிரெண்டு பேர்.
இயற்றமிழ் மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட பல இலக்கியங்களைக் கற்றுத்தருவார். ஆண்டுக்கொருமுறை இந்தப் பாடங்களில் தேர்வும் உண்டு.
ஆனால், பரிதிமாற்கலைஞருடைய சிறப்பு, வகுப்புகளில் ஆசிரியர் உயர்வானவர், மாணவர் ஒரு படி கீழே உள்ளவர் என்கிற நெறிமுறைகள் இருக்காது. ஆசிரியரும் மாணவரும் கிட்டத்தட்ட சமமானவர்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் இணையாக உரையாடுவார்கள். பல தமிழ் நூல்கள், அறிஞர்கள், கருத்துகள், படைப்புகளைப்பற்றி ஆராய்வார்கள். பன்னாட்டு இலக்கிய மரபுகளை இந்தியாவுடன் ஒப்பிடுவார்கள்.
தன்னுடைய மாணவர்கள் தமிழின் அனைத்துப் பகுதிகளிலும் நன்கு தேர்ச்சி பெறவேண்டும் என்று நினைத்தார். சிறந்த நூல்களை எழுதித் தமிழுக்குத் தொண்டாற்றவேண்டும், அதன்மூலம், நம் மொழியின் செழுமை மேம்படவேண்டும் என்றெல்லாம் பரிதிமாற்கலைஞர் விரும்பினார். இந்த நோக்கத்துடன், இயற்றமிழ் மாணவர்களுக்காகவே அவர் தனி நூல்களை எழுதியதும் உண்டு.
எடுத்துக்காட்டாக, 1897இல் இயற்றமிழ் மாணவர்களுக்கு நாடகத் தமிழைக் கற்பிப்பதற்காகச் சுமார் எழுபது சூத்திரங்களை எழுதினார். பின்னர் அதில் இன்னும் பல சூத்திரங்களைச் சேர்த்து 'நாடகவியல்' என்ற தொகுப்பாக வெளியிட்டார்.
ஒருமுறை, பரிதிமாற்கலைஞர் அவருடைய கல்லூரியின் தேர்வாளர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனக்குப் பதில் உ.வே.சா. வை நியமிக்கும்படி பல்கலைக்கழகத்துக்குத் தெரிவித்து விட்டார்.
பரிதிமாற்கலைஞர் இந்தப் பொறுப்பை ஏற்காதது ஏன்?
அந்த ஆண்டு, பரிதிமாற்கலைஞருடைய இயற்றமிழ் மாணவர்களில் ஒருவரான சரவணர் தேர்வெழுதவிருந்தார். அந்த நேரத்தில், தான் தேர்வாளராக இருப்பது சரியில்லை என்று கருதினார் பரிதிமாற்கலைஞர். ஆகவே, நேர்மையுணர்வுடன் அப்பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
தமிழுக்காக, தன்னுடைய மாணவர்களுக்காகக் கூடுதல் நேரத்தையும் உழைப்பையும் தந்தார் பரிதிமாற்கலைஞர். தன் மாணவர்களின் வெற்றி மீது சிறு ஐயம் படிவதையும் விரும்பாதவராக இருந்தார். அதற்காகத் தேர்வாளர் பதவியையும் துறந்தார்.
- என். சொக்கன்
