PUBLISHED ON : அக் 07, 2019
சிலேடைப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர் காளமேகப் புலவர். ஒரு முறை சத்திரம் ஒன்றிற்கு உணவு உண்ணச் சென்றார். நீண்டநேரம் காத்திருந்தார். ஆனால், உணவு வழங்கப்படவில்லை. வெகுநேரம் கடந்த பிறகுதான் உணவு வழங்கப்பட்டது. கவி அல்லவா, பசியிலும் தன் கோபத்தை அழகான கவிதையாக்கி விட்டார்.
'கத்துக்கடல் நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில் அரிசி வரும் குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்'.
இதன் பொருள்:
கடல் ஓசை கேட்கும் நாகை காத்தான் சத்திரத்தில், பொழுது அஸ்தமிக்கும்போது தான் அரிசி வரும். ஊர் உறங்கும் நேரத்தில் தான் அரிசி உலையில் இடப்படும். ஒரு கரண்டி அன்னம் இலையில் விழும்போது, வானில் வெள்ளி முளைத்திருக்கும் (விடிந்திருக்கும்). எல்லாமே தாமதமாக நடக்கும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்.
இதைக் கேட்ட சத்திரக்காரன் அரண்டு போனான். மிகவும் வருந்தினான். புலவர் தன் சத்திரம் பற்றி இப்படி எழுதி விட்டால், நற்பெயர் கெட்டுப்போய் விடுமே என்று காளமேகப் புலவரிடம் மன்னிப்புக் கோரினான். காளமேகப் புலவரும் அவரை மன்னித்து, வசைப் பாடலில் ஒரு சொல்லைக்கூட மற்றாமல், அப்படியே புகழுரையாக மாற்றிச் சொன்னார்.
'காத்தான் சத்திரத்தில், அஸ்தமிக்கும்போது, அதாவது, நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடும் போதுகூட, குறைவின்றி அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு ஊரே (பசி) அடங்கும். இலையில் விழும் ஓர் அகப்பை அன்னம், வானில் தெரியும் வெள்ளி நட்சத்திரம் போல், வெண்மையாக இருக்கும்' என்று கூற, சத்திரக்காரன் மிகவும் மகிழ்ந்து போனான்.
- ராஜசியாமளா
