வலி மிகுதல் - பகுதி 10: விளித்தொடருக்கு வலி மிகாது
வலி மிகுதல் - பகுதி 10: விளித்தொடருக்கு வலி மிகாது
PUBLISHED ON : நவ 26, 2018
'வள்ளி சிரித்தாள்' என்னும்போது, அங்கே வலி மிகவில்லை. ஏனென்றால், வள்ளி என்பது பெயர்ச்சொல். சிரித்தாள் என்பது வினைச்சொல். வள்ளி என்னும் எழுவாயும் சிரித்தாள் என்ற பயனிலையும் அடுத்தடுத்து வந்தன. எழுவாயும் பயனிலையும் அவ்வாறு வருவது எழுவாய்த் தொடர் எனப்படும். எழுவாய்த் தொடருக்கு வலி மிகாது என்பதால், 'வள்ளி சிரித்தாள்' என்று எழுதுகையில் வலி மிகவில்லை. 'வள்ளிச் சிரித்தாள்' என்று ஒற்று(ச்) சேர்த்து எழுதக்கூடாது.
முதற்சொல் பெயராக இருந்து, அடுத்து வரும் சொல் வினையாக அமைந்தால் அங்கே வலி மிகுவதில்லை. இன்னொரு தொடரைப் பார்க்கலாம்.
* தம்பி பார்
* முத்து போ
* வள்ளி திரும்பு
இத்தொடர்களில் முதற்சொற்கள் பெயர்ச்சொற்களாக இருக்கின்றன. தம்பி, முத்து, வள்ளி ஆகியவை பெயர்ச்சொற்கள்தாம். அதையடுத்து வருபவை பார், போ, திரும்பு என்னும் வினைச்சொற்களே. இது எழுவாய்த் தொடராகுமா? ஆகாது. ஏனென்றால், எழுவாய்த் தொடரில் அதனை அடுத்துவரும் வினைச்சொல் எழுவாய்க்கு உரியதாக இருக்கும். எழுவாய் செய்யும் வேலையைத்தான் அந்த வினைச்சொல் உணர்த்தும். வள்ளி சிரித்தாள் என்னும்போது சிரிக்கும் வினையை வள்ளி என்னும் எழுவாய் செய்தது.
ஆனால், தம்பி பார் என்னும் வினையில் தம்பியை அழைத்துப் பார்க்கும்படி யாரோ கட்டளையிடுகிறார்கள். முத்தினை அழைத்துப் போகச் சொல்கிறார்கள். வள்ளியைத் திரும்பச் சொல்கிறார்கள்.
இவ்வாறு ஒரு பெயரை அழைத்து அமைக்கும் தொடர்கள் 'விளித்தொடர்கள்' எனப்படும். விளித்தல் என்றால் அழைத்தல். தலைவா வா, கண்ணே கண்ணுறங்கு, கிளியே பேசு, பறவையே பறந்து செல், நிலா ஓடி வா, பெரியோர்களே சிந்தியுங்கள் என்பவை அனைத்தும் விளித்தொடர்கள்.
விளித்தொடரிலும் ஒரு பெயர்ச்சொல்லும் அதையடுத்து ஒரு வினைச்சொல்லும் அமைந்திருக்கும். ஆனால் பெயர்ச்சொல் அழைப்புக்கு உட்பட்டதாக இருக்கும்.
எழுவாய்த் தொடருக்கு எப்படி வலி மிகுவதில்லையோ அவ்வாறே விளித் தொடருக்கும் வலி மிகாது. தம்பி பார், முத்து போ, வள்ளி திரும்பு ஆகிய தொடர்களில் எங்கும் வலி மிகவில்லை.
- மகுடேசுவரன்