தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முயற்சியே மலர்ச்சி

முயற்சியே மலர்ச்சி

முயற்சியே மலர்ச்சி


PUBLISHED ON : நவ 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு பெரிய மரம். அதன் நிழலில் ஒரு சிறு பாக்கு மரம் முளைத்தது. பாக்கு மரத்துக்குச் சூரிய ஒளி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ஒளியைத்தான் அது அமுதமாக நினைத்தது.

ஆனால், பெரிய மரத்தின் நிழலில் வளரும் சிறிய மரத்துக்குச் சூரிய ஒளி எப்படிக் கிடைக்கும்? எந்நேரமும் அது இருளிலேயே வளர வேண்டியிருந்தது.

பாக்கு மரத்துக்கு இருள் பிடிக்கவில்லை. அது ஒளியை விரும்பி வளர்ந்தது. மேலும் மேலும் உயரமானது.

ஆனால், அது என்னதான் உயரமாக வளர்ந்தபோதும், பெரிய மரத்தின் நிழலைத் தாண்டிச் சூரிய ஒளியை அதனால் காண இயலவில்லை. ஆனாலும் பாக்கு மரம் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து அந்தப் பெரிய மரத்துடன் போராடியது, துணிச்சலுடன் முன்னேறியது.

ஒரு நாள், பாக்கு மரம் அந்தப் பெரிய மரத்தைத் தாண்டி உயரமாக வளர்ந்துவிட்டது. இனி அதற்கு எந்தத் தடையும் இல்லை. அமுதமாகிய சூரிய ஒளியை ஆசைதீரப் பருகியது. இத்தனை ஆண்டுகளாகப் பெரிய மரத்துடன் போராடிப் பெற்ற வெற்றியை ருசித்தது.

ந. பிச்சமூர்த்தி எழுதிய புதுக்கவிதை ஒன்றில்தான் நாம் இந்த இயற்கை நிகழ்வைக் காண்கிறோம். பெரிய மரத்தின் நிழலில் வளரவேண்டியிருந்த ஒரு பாக்கு மரத்தின் கதையை விவரிக்கும் கவிஞர், அதன் மூலம் அரிய வாழ்க்கை உண்மையொன்றை நமக்குச் சொல்கிறார்:

'அதுவே வாழ்க்கைப் போர்,

முண்டி மோதும் துணிவே இன்பம்,

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி'

இருள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், வெளிச்சம் வருவதற்கான அடையாளங்களே இல்லாவிட்டாலும், நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. அந்த இருளுக்குக் காரணமான 'பெரிய மரம்' எத்தனை வலிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஒளியைத் தேடும் நம்முடைய துடிப்பும் உழைப்பும் சேர்ந்தால் அதை வெல்லலாம்.

பாறையிலும் சிறு செடிகள் முளைத்திருப்பதைக் காண்கிறோம். தன் குஞ்சுகளைப் பிடிக்க வரும் பெரிய பறவையை ஒரு சிறிய கோழி எதிர்த்துப் போராடுவதைப் பார்க்கிறோம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து போராட வேண்டும் என்று இயற்கை நமக்குச் சொல்லித் தருகிறது.

நாம் எடுக்கும் முயற்சிகள் உடனடியாக வெற்றி தராதபோது, தொடர்ச்சியான தோல்விகளைக் காணும்போது, விலகிவிடலாமா என்கிற சலிப்பு தோன்றும்போது, அந்தப் பாக்கு மரத்தை எண்ணிக்கொள்ளலாம். தொடர்ந்து போராடுவதற்கான ஊக்கம் பெறலாம்.

'துணிவே இன்பம்' என்ற கவிஞருடைய வரிகள் அற்புதமானவை, நம்மால் வெல்ல இயலும் என்கிற துணிச்சல் மனத்துக்கு மகிழ்ச்சியை, ஊக்கத்தைத் தருகிறது, தொடர்ந்து முயலவைக்கிறது. அந்த முயற்சி, தடைகளை உடைத்துத்தள்ளி வாழ்வில் மலர்ச்சியைக் கொண்டுவருகிறது.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us