PUBLISHED ON : நவ 26, 2018

இந்தியாவில் காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த, 'காமிக் கான்' நிகழ்ச்சி பெங்களூருவில் நவம்பர் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ஓவியர்கள், வரைகலைஞர்கள், காமிக்ஸ் புத்தகப் பதிப்பாளர்கள் ஆகியோர், தம் படைப்புகளை இங்கே காட்சிக்கு வைத்திருந்தனர். சர்வதேச அளவில் பிரபலமான ஜப்பான் நாட்டின் மாங்கா காமிக்ஸ், அமெரிக்காவின் மார்வெல் காமிக்ஸ் பதிப்பகங்களும் தம்முடைய காமிக்ஸ் புத்தகங்கள், காமிக்ஸ் கதாபாத்திரங்களின் பொம்மைகள், கீசெயின்கள், போஸ்டர்கள் ஆகிய பொருட்களைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.
வழக்கமாக 'காமிக் கான்' நிகழ்ச்சிகளில் கூட்டம் அவ்வளவு இருக்காது. காமிக்ஸ் புத்தகங்கள், திரைப்பட ரசிகர்கள், அனிமேஷன் துறையினர், ஓவியர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சிறிய வட்டத்திற்கான நிகழ்ச்சியாகவே இது இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கமான எதிர்பார்ப்பை மீறி, பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்து குவிந்தனர்.
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து வயதினரையும், இங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. சென்னையில் காமிக் கான் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. அதனால், பல சென்னைவாழ் காமிக்ஸ் ரசிகர்களும் நிகழ்ச்சியில் ஆர்வமாகப் பங்கேற்றனர்.
காஸ் ப்ளே
தமக்குப் பிடித்த காமிக்ஸ் கதாபாத்திரங்களைப்போல வேடம் போட்டுக்கொண்டு வருவதை, 'காஸ் ப்ளே' என்று அழைப்பார்கள். அமெரிக்காவில்தான் இந்தக் கலாசாரம் முதலில் தொடங்கியது.
பல்வேறு நாட்டினர் அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சிக்குச் செல்வார்கள். அப்போது பிரபலமாக இருக்கும் சூப்பர் ஹீரோக்கள், காமிக்ஸ் கதாபாத்திரங்களைப் போல வேடமிட்டுச் செல்வார்கள். சிறப்பாக வருபவர்களுக்கும், அந்தக் கதாபாத்திரங்களைப் போன்றே நடிப்பவர்களுக்கும் பரிசு அளிக்கப்படும்.
இந்தியாவிலும் இந்தக் கலாசாரம் தொற்றிக்கொண்டது. பல இளைஞர்கள், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்கள் போல வேடமிட்டு காமிக் கான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். பேட்மேன், பிளாக் பாந்தர், ஸ்பைடர் மேன், ஒன்டர் உமன், டெட் பூல் என, பலரும் பிரபல சூப்பர் ஹீரோக்களை போல் வேடமிட்டு வந்திருந்தார்கள்.
மார்வெல் பித்து
இந்தியாவில், மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாக இருப்பதை உணர முடிந்தது. மார்வெல் காமிக்ஸ் பதிப்பாளர்கள் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என, பல சிறப்புப் போட்டிகளை நடத்தினார்கள். மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் டீஷர்ட்கள், பொம்மைகள், கீசெயின், போஸ்டர்கள், பைகள் என, குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
திரும்பும் பக்கமெல்லாம் மார்வெல் காமிக்ஸ் கடைகள்தான். குழந்தைகள் ஹல்க், க்ரூட் பொம்மைகளை விரும்பி வாங்கினார்கள். இளைஞர்களோ, பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் போன்ற கதாபாத்திர பொம்மைகளையே விரும்பினர்.
தன்னார்வ பதிப்பாளர்கள்
காமிக்ஸ் வாசகர்களை உருவாக்க வேண்டும், புத்தகங்களைப் போல இணையத்திலும் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவில் பல தன்னார்வ பதிப்பாளர்கள் அங்கு வந்திருந்தனர். காமிக் கான் நிகழ்ச்சியின் முக்கிய நாயகர்களே இவர்கள்தான்.
ஏனெனில், இவர்கள் சிறிய அளவில் முதலீடு செய்து, காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு, விற்பனைக்கு வைத்திருந்தனர். இவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் குறைந்த அளவு பக்கங்களே கொண்டிருந்தன. வாசகர்கள் மத்தியில் காமிக்ஸுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கம்.
“பதின் பருவத்தினரும், பெரியவர்களுக்குமான காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்குவதுதான் என் நோக்கம். நம்மூரில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள் பல வந்துவிட்டன. ஆனால், பெரியவர்கள் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிப்பதில்லை. படங்களோடு படிக்க வேண்டுமா என்று பலரும் நினைக்கின்றனர். அதை உடைக்கத்தான் பல நகைச்சுவையான காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்க இருக்கிறேன். மேலும், வெப்காமிக்ஸ் தான் என் விருப்பம்” என்றார் சுமித்குமார். இவர் பாகர்மேக்ஸ் (Bakarmax) என்ற வெப் காமிக் வலைத்தளத்தை நடத்தி வருகிறார். நமக்குத் தெரிந்த, கவனிக்க மறந்த பல விஷயங்களை காமிக்ஸ் வடிவத்தில் உருவாக்குகிறார். இவரைப்போல பல இளைஞர்களும், தம் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
பெங்களூருவைப் போல, டில்லி, மும்பையிலும் வரும் டிசம்பர் மாதத்தில் காமிக் கான் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத் நகரிலும் நடந்தது. இந்தியாவில் 2011ஆம் ஆண்டுதான் இந்நிகழ்ச்சி முதன்முதலில் தொடங்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளில் பல மாற்றங்களை காமிக் கான் நிகழ்ச்சி சந்தித்துள்ளது. குறிப்பாக, காமிக்ஸ் படைப்பாளர்கள் ஒருங்கிணையும் மையமாக இருந்தநிலை, இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மாறாக, காமிக்ஸ் சார்ந்த பொருட்களின் விற்பனைத்தளமாக இந்நிகழ்ச்சி மாறிவிட்டதாகப் பல படைப்பாளர்கள் தங்களுடைய வருத்தத்தைப் பதிவு செய்தனர்.
