வலி மிகுதல் - பகுதி-9: பெயர்ச்சொல்லுக்குப் பின்னே ஒற்று வருமா?
வலி மிகுதல் - பகுதி-9: பெயர்ச்சொல்லுக்குப் பின்னே ஒற்று வருமா?
PUBLISHED ON : நவ 19, 2018
சொற்களைத் தனித்தனியாக எழுதும்போது, எவ்வித இடையூறும் இல்லை. ஆனால், தனிச்சொல்லை வைத்துக்கொண்டு எந்தப் பொருளையும் உணர்த்த முடியாது. சொற்களை ஒவ்வொன்றாகக் கோத்து சொற்றொடராக்க வேண்டும். சொல் + தொடர் என்பதுதான் சொற்றொடர்.
வள்ளி என்பது பெயர்ச்சொல். வெறும் பெயர்ச்சொல்லை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? 'சிரி' என்பது வினைச்சொல். வெறும் வினைச்சொல்லை வைத்துக்கொண்டும் ஒன்றும் செய்ய இயலாது. இவ்விரண்டு சொற்களையும் சேர்த்து எழுதவோ பேசவோ வேண்டும். அப்போதுதான் ஒரு பொருளை உணர்த்த முடியும். 'வள்ளி சிரித்தாள்' என்று சொற்றொடராக்க வேண்டும். வள்ளி என்ற பெயரை உடையவள் சிரிக்கும் செயலைச் செய்தாள் என்பதை அச்சொற்றொடர் விளக்குகிறது.
இவ்வாறு ஒரு சொற்றொடரை அமைப்பதில் இம்முறையே அடிப்படை. ஒரு பெயர்ச்சொல் என்ன வினையைச் செய்தது என்று விளக்குவது.
வள்ளி சிரித்தாள்
முத்து பாடினான்
குழந்தை குழறியது
குருவி பறந்தது
கனி பழுக்கும்
உப்பு துவர்க்கும்
இவ்வாறு பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமாக ஒரு சொற்றொடரை அமைக்கிறோம். பெயர்ச்சொல்லுக்கு 'எழுவாய்' என்று பெயர். வினைச்சொல்லுக்குப் 'பயனிலை' என்று பெயர். எழுவாயும் பயனிலையும் சேர்ந்து ஒரு சொற்றொடரை ஆக்குகின்றன. இதற்கு 'எழுவாய்த் தொடர்' என்று பெயர்.
எழுவாய்த் தொடரில் ஒரு எழுவாய் (பெயர்ச்சொல்) இருக்கும். ஒரு பயனிலை (வினைச்சொல்) இருக்கும். 'எழுவாய்' என்ன செய்தது என்பதைப் 'பயனிலை' உணர்த்தும்.
வலி மிகுதல் என்ற பொருளில் நாம் இங்கே கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எழுவாய்த் தொடருக்கு வலி மிகாது. மேலுள்ள எடுத்துக்காட்டுத் தொடர்களைப் பாருங்கள், எங்கும் வலி மிகவில்லை.
- மகுடேசுவரன்
பூர்த்தி செய்
1. பெயர்ச்சொல்லுக்கு.....................என்று பெயர் (எழுவாய், நிறைவாய்)
2. வினைச்சொல்லுக்கு.................என்று பெயர்.(நினைவில்லை, பயனிலை)
