PUBLISHED ON : டிச 12, 2016

ராமலிங்கம்பிள்ளை: 1888 - 1972
அது, 1914ம் ஆண்டு. கவிதைப் போட்டி பற்றி, ஓர் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில், 'நாட்டுப் பற்றுடன், பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். கும்மி மெட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப்படும் பாடல் தொகுதிக்கு, 500 ரூபாய் பரிசு' என்று இருந்தது.
அந்த அறிவிப்பை சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையை ஏற்றவர்கள் வெளியிட்டிருந்தனர். கோகலே மிதவாதப் போக்கை கடைப்பிடித்தவர். இந்த அறிவிப்பு, 26 வயது நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் கண்ணில் பட்டது. அவர் தீவிர சுதந்திரம் கேட்கும், அரவிந்தர், திலகரைப் போற்றியவர். இருந்தாலும், போட்டிக்கு பாடல்களை அனுப்பினார். தேர்வுக் குழுவினரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், 'உங்கள் பாடல் தொகுதியில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலை நீக்கினால், பரிசு தரப்படும்' என்று எழுதி இருந்தனர்.
அந்தக் காலத்தில், 500 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் நாமக்கல் கவிஞர், 'பரிசு வேண்டாம்' என்று கூறிவிட்டார். அவர், எழுதியிருந்த பாடல்:
'நீதி நிலைக்க நினைந்தவனாம் அருள்
ஜோதி உருக்கொண்ட மேனியனாம்
ஆதி அறத்தை அளித்திடுவான் எங்கள்
அரவிந்த நாதனைப் போற்றுங்கடி'
என்று அரவிந்தரைப் போற்றி, கடவுள் வாழ்த்துப் பாடலாக வைத்திருந்தார் ராமலிங்கம் பிள்ளை. அவரை மட்டும் அல்ல,
'பாலை முனிந்த பனிமொழியான் பதி
பாலகங்காதரன் பாடுங்கடி'
என்று பால கங்காதர திலகரையும்,
'கந்தம் மணக்கிற ஜோதியடி புகழ்
காந்தியடி வெகு சாந்தனடி' என்று காந்தியடிகளையும் போற்றி இருந்தார். இந்த மூன்று கவிதைகளை நீக்க மறுத்தக் காரணத்தால், ராமலிங்கம் பிள்ளைக்கு பரிசு கிடைக்கவில்லை. எந்த சமரசத்துக்கும் செல்லாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார், ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல்லில் பிறந்ததால், ஊர் பெயர் இவருடன் சேர்ந்து கொண்டது.
தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். எளிமையும், இனிமையும் இவர் கவிதையின் தனித்தன்மை. படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், இவரது சுதந்திரப்பாடல்கள் அமைந்திருந்திருந்தன.
'பாரத நாடு பாட்டன் சொத்து'
என்றவர், தமிழகத்தையும், தமிழையும் போற்றத் தவறவில்லை.
'முத்தமிழ் நாடு என்றன் முன்னையர் நாடு
முற்றிலும் சொந்தம் எனக்கெனப் பாடு'
என்ற பாடலில், தமிழ்நாடு என்னுடைய மூதாதையர்கள் சொத்து. அது எனக்கும் சொந்தமானது. அதை பிறர் உரிமை கொண்டாட எந்தத் தகுதியும் இல்லை என்று கூறினார். சுதந்திரம், நம்முடைய பிறப்புரிமை. அதை அடைவதற்கு யாருக்கும் நாம் அச்சப்படத் தேவையில்லை என்பதும், அவர் கருத்தாக இருந்தது.
1930ம் ஆண்டு, ஆங்கில அரசாங்கம் உப்புக்கு வரி விதித்தது. இந்தியர்கள் யாரும் உப்பு தயாரிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதித்தது. இதனால் காந்தியடிகள் தலைமையில் நாடெங்கும் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் அந்தப் போராட்டம் வேதாரண்யம் கடற்கரையில், ராஜாஜி தலைமையில் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராமலிங்கம் பாடல்களைப் பாடியபடியே சென்றனர். அந்தப் பாடல்,
'கத்தியின்றி ரத்தமின்றி யுத்மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'
பாடல்கள் வாயிலாக, நாட்டுப்பற்றை மக்கள் மனதில் விதைத்ததோடு, தீரத்துடன் போராடும் மனநிலையையும் ஏற்படுத்தினார்.
வரையும் பழக்கம்
நாமக்கல் கவிஞர், சிறந்த ஓவியராகவும் இருந்தார். பள்ளியில் ஆசிரியர் ஒரு கணக்குக் கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ராமலிங்கம் மட்டும் ஒரு படத்தைப் பார்த்து, தம் பலகையில் வரைந்து கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக் கேட்க, ராமலிங்கம் ஓவியத்தைக் காட்டினார். ஆசிரியர் அவரை அடித்து விட்டார். ஆனாலும் தன் திறமையை கைவிடவில்லை ராமலிங்கம். கல்லூரி சென்றபோதும், வரையும் பழக்கத்தை விடாது தொடர்ந்தார். கல்லூரியில் பாடம் நடத்திய பேராசிரியர் ஒருவரை அப்படியே வரைந்து கொடுத்தார். அதைப் பார்த்த அந்த ஆசிரியர், இவருக்கு பரிசு தந்து பாராட்டி, உற்சாகப்படுத்தினார். ஓவியங்களைக் கொண்டு கண்காட்சியும் நடத்தினார்.
பாரதியாரை சந்திக்கச் சென்ற ராமலிங்கம், அவரின் காலில் விழப்போனார். அவரை தடுத்த பாரதியார், 'ஓவியக் கவிஞரே!' என்று அழைத்ததோடு, தம்மை படமாக வரைந்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
முக்கிய படைப்புகள்
கவிதைகள்
* தேசபக்திப் பாடல்கள்
* தமிழன் இதயம்
* காந்தி அஞ்சலி
* கவிதாஞ்சலி
* தமிழ்மணம்
* நாமக்கல் கவிஞர் பாடல்கள்
கட்டுரைகள்
* தமிழ்மொழியும் தமிழரசும்
* இசைத்தமிழ்
* கவிஞன் குரல்
* திருக்குறள் - உரை
புதினங்கள்
* மலைக்கள்ளன்
* தாமரைக்கண்ணி
* கற்பகவல்லி
* மரகதவல்லி
பெருமைகள்
1949 - தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.
1954 - சாகித்ய அகாதமியின் நிர்வாகக்குழு உறுப்பினர்.
1956 - எம்.எல்.சி.யாக நியமனம்.
1971 - இந்திய அரசின் 'பத்மபூஷன்' பட்டம்.
முக்கிய முழக்கங்கள்
* தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு'
* தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா'
* கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்