PUBLISHED ON : டிச 12, 2016

காவிரியின் குறுக்கே, கரிகாலன் கட்டிய கல்லணை பற்றி பெருமையாகப் பேசுகிறோம். அதை கரிகாலன் எப்படி கட்டினார்?
நீர் பெருக்கெடுத்து ஓடும்போது, பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டுவந்து ஆற்றில் போடச் சொன்னார். அப்படி போடும்போது, கற்கள் ஒவ்வொன்றும் மணலுக்குள் புதையும். இப்படி புதையும் கற்கள் மீது, வரிசையாக கற்களை போட்டுத்தான் கரிகாலன் கல்லணையை கட்டினார் என்பதை, சர் ஆதர் காட்டன் என்ற ஆங்கிலேய அறிஞர் எடுத்துச் சொன்னார். அதன் பிறகுதான், நம்மவர்களின் தொழில்நுட்பம் பற்றி, உலகத்திற்கே தெரிய வந்தது. கல்லணை, திருச்சி மாவட்டத்தில், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
நாம் கடற்கரையின் ஓரத்தில் நீரில் சென்று நின்றால், அலையடித்து வந்து நம் காலைத் தழுவிச் செல்லும். அலையடித்துச் சென்ற பிறகு, நம் பாதங்களுக்கு கீழ் சிறிது மணல் அரித்து, சிறிய குழி ஏற்படும். இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே, கரிகாலனின் கல்லணை கட்டப்பட்டது. கற்களால் கட்டப்பட்டதால் கல்லணை.
கல்லால் கட்டப்படும் அணையை, தொல்காப்பியம் கற்சிறை என்கிறது. ஆற்றில் மிகுந்த வேகத்தோடும், நீர்ச்சுழலோடும் ஓடிவரும் நீரை, கற்சிறை தடுக்கும். அதுபோல், போர்க்களத்தில் பெருகி வருகிற பகை நாட்டு வீரர்களை, எதிர்கொண்டு வீரர்கள் தடுத்தனர் என்கிறது தொல்காப்பியம்.
'வருவிசை புனலை கற்சிலைப் போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்' (தொல் 1009 )
என்பதே அந்த நூற்பா.
- மணி.மாறன்