PUBLISHED ON : பிப் 10, 2020

சத்திமுற்றப் புலவர் என்று ஒருவர் இருந்தார். அவரைச் சத்திமுத்தப்புலவர் என்றும் கூறுவார்கள். சோழநாட்டிலுள்ள இன்றைய பட்டீசுவரத்தின் ஒரு பகுதியே அன்று சத்திமுற்றம் எனப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த புலவர்களை, ஊர்பெயரால் அழைப்பது வழக்காகும்.
அன்றிருந்த பாண்டிய மன்னர், தமிழ்பாடும் புலவர்களுக்கு பரிசில் வழங்குகிறார் என்பதைக் கேள்வியுற்ற சத்திமுத்தப் புலவர் மதுரைக்குச் சென்றார். மன்னரின் அரண்மனையை நெருங்கி வாயிற்காவலனை அணுகுகிறார். வேந்தனைக் கண்டு பாடி பரிசில் பெற்றுச் செல்லும் தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். சோழ நாட்டிலிருந்து ஒரு புலவர் வந்திருக்கிறார் என்பதைப் பாண்டி நாட்டுப் புலவர்கள் விரும்பவில்லை. வாயிற்காவலனுக்குச் சொல்லிக்கொடுத்து, அரண்மனைக்குள் அவரை நுழைய விடாதே என்று கேட்டுக்கொண்டனர். வாயிற்காவலனும் அதற்கிசைந்து சத்திமுற்றப் புலவரை மனைக்குள் விடவில்லை. தம் வறுமையைப் போக்குவதற்குப் பரிசில் பெற்றுச் செல்ல வந்த சத்திமுற்றத்தார்க்கு, ஏமாற்றம் தாளவில்லை. வருவோர்க்கு வழங்கும் வள்ளல் என்று கேள்வியுற்று வந்தால் இங்கே வழிவிடுவார் இல்லை. அயர்ச்சியோடும் துயரத்தோடும், மதுரை நகரத்தின் மண்டபம் ஒன்றில் களைத்துப் படுத்துவிட்டார்.
வழக்கம்போல் பாண்டிய மன்னர் நகர்வலம் வருகின்ற வேளை அது. அந்நேரத்தில் நாரைக்கூட்டமொன்று வடக்கு நோக்கிப் பறந்தது. நாரையின் அலகுக்கு எதனை உவமை சொல்லலாம் என்று மன்னருடைய எண்ணம் சென்றது. அந்த நாரைக்கூட்டத்தைப் பசியோடு படுத்திருந்த சத்திமுற்றப்புலவரும் பார்த்தார். தெற்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் நாரையைப் பார்த்ததும் வீட்டு நினைவு வந்துவிட்டது. வடக்கேதான் அவருடைய ஊரான சத்திமுற்றம் இருக்கிறது. அந்நாரைகள் வடக்கே சென்று சத்திமுற்றத்தாரின் மனைவியைப் பார்க்கக்கூடும். அதனால் தூதுவிடுவதுபோல் ஒரு பாடலைப் பாடுகிறார்.
'நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர் வாய்ச் செங்கால் நாராய்'
என்று தொடங்குகிறார். அதில் 'நாரைகளே, நீங்கள் போய் என் வீட்டின் பொத்தலான கூரை மீது அமர்ந்து, அங்கே எனக்காகக் காத்திருக்கும் மனைவியைப் பாருங்கள் நான் இங்கு குளிருக்கு ஆடையின்றி படுத்திருக்கும் அவலத்தைக் கூறுங்கள் 'என்று பாடுகிறார். 'பனங்கிழங்கு பிளந்ததுபோன்ற பவளச் சிவப்புடைய கூர்மையான அலகுடைய நாரைகளே ' என்று நாரையின் அலகிற்கு, பனங்கிழங்கின் நிறத்தை ஒப்பிடுகிறார்.
பாண்டியனின் செவிகளில் சத்திமுற்றப் புலவரின் பாடல், தெள்ளமுதாய் வந்து விழுகிறது. புலவரை அணுகி வணங்கி அறிகிறார். நடந்த தவறுக்கு வருந்தி அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று பரிசில் தந்து மகிழ்வித்தார். புலவரின் வீட்டினைப் பழுதுபார்த்துக் கட்டித் தந்தார். தமிழாற்றல் வாய்ந்த புலவரின் ஒற்றை உவமை, அரண்மனை வாயிற்கதவைத் திறக்கச் செய்து, மன்னரின் மனத்தை அசைத்துப் பார்த்துவிட்டது. அதுதான் தமிழின் ஆற்றல் !
மகுடேசுவரன்

