PUBLISHED ON : பிப் 10, 2020

உணவுப் பிரியர்களுக்கு இந்தியா ஒரு நல்ல இடம். மாநிலத்துக்கு மாநிலம் பலவகையான உணவு, சுவை என விதவிதமாகக் கிடைக்கும். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான உணவையும் சாப்பிட ஆசை என்றால், நிச்சயம் அதற்கு அவர்களுடைய 'தாலி'(முழுச் சாப்பாடு) சாப்பிட வேண்டும். அதில் அவர்களுடைய பாரம்பரிய உணவுவகைகள் நிச்சயம் இடம் பெறும்.
தாலி என்றாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது; அதிலும் இராஜஸ்தான் என்றால், கேட்கவே வேண்டாம். வயிறும், மனமும் உணவுக்கு எப்போதும் தயாராக இருக்கும். ரொட்டி வகைகள், தால்(பருப்பு), காய்கறி, ஊறுகாய், இனிப்பு என தட்டில் பல வண்ணங்களும், சுவைகளும் நிறைந்திருக்கும்.
இராஜஸ்தானில் எப்போதும் கிடைக்கும் முக்கியமான உணவு 'தால் பாத்தி சுர்மா' (Dal Bati Churma). ஜெய்ப்பூர், மேவார், ஜோத்பூர், பிகானீர், ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் இந்த உணவு மிகவும் பிரபலம். தால் பாத்தி சுர்மா எங்கிருந்து வந்தது என்பதற்கு வரலாறு உண்டு.
இராஜஸ்தானின் மோவார் என்ற ஊரில், சித்தூர்கர் என்ற பிரபலமான கோட்டை உள்ளது. அங்கே, கோதுமை மாவைத் தண்ணீர் விட்டு, உருண்டைகளாகப் பிசைந்து நெய்யில் பொரித்தெடுக்கும் பாத்தி எனும் உணவு மிக முக்கியமானது.
இந்த உணவு நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். போர்க்காலத்தில் சரியான நேரத்தில் உண்ண முடியாது என்பதால், போருக்குப்போகும் போது அரசர்கள், சேனைகளுக்கு இதைக் கொடுத்து அனுப்புவார்கள். கோதுமை, நெய் கலந்திருப்பதால், போரால் உண்டாகும் களைப்பு குறையும். ஒருகட்டத்தில் அரசர்கள் மட்டுமன்றி மக்களும் இந்த உணவை விரும்பிச் சாப்பிடத் தொடங்கினர்.
ஒரேமாதிரியாகச் சாப்பிட்டு அலுத்துப்போன அடுத்த தலைமுறையினர், இதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள்.
சுர்மா என்று அழைக்கப்படும் மற்றொரு உணவு வகையோடு இதை இணைத்தார்கள். பாத்திக்கும், சுர்மாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கோதுமையை நொறுங்கலாக அரைத்துக் கொள்ள
வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் நெய் சேர்த்தால், அதுதான் சுர்மா. இதை, பாத்தியோடு இணைத்தார்கள். ஆகவே, பாத்தி சுர்மா என்றானது.
இதில் எப்போது தால் வந்தது? ஆம்! அரசர்கள் காலம் எல்லாம் மாறிவிட்டது. இதை தினசரி உணவாக மாற்றலாம் என சமையல் நிபுணர்கள் நினைத்தார்கள். ஆகவே, இதைத் தாலுடன் சேர்த்து தால் பாத்தி சுர்மாவாக சாப்பிடத் தொடங்கினர். அதுதான் இன்று இராஜஸ்தான் சாப்பாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.
இராஜஸ்தான் உணவகம் சென்றால் நீங்களும் மறக்காமல் வாங்கி சாப்பிட்டு பாருங்கள். நெய் வாசனையோடு இனிப்பு, காரம் என புதியதோர் ருசி கிடைக்கும்.
- காரா

