PUBLISHED ON : பிப் 10, 2020

ஜாதிக்காய்
ஆங்கிலப் பெயர்: நட்மெக் (Nutmeg)
தாவரவியல் பெயர்: மைரிஸ்ட்டிகா பிராகாரன்ஸ் (Myristica fragrans)
தாயகம்: இந்தோனேஷியா
வளரும் இடங்கள்: இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மலேசியா, கரீபியன் தீவுகள்
மற்ற எல்லா நறுமணப் பொருட்களையும் விட ஜாதிக்காய்க்கு ஒரு தனித்துவம் உண்டு. அது என்ன தெரியுமா? பொதுவாக, ஒரு மரத்தில் இருந்து நமக்கு ஒரு பொருள்தான் கிடைக்கும். ஆனால் இந்த ஒரே மரத்தில் இருந்து நமக்கு இரண்டு நறுமணப் பொருட்கள் கிடைக்கின்றன. ஒன்று கொட்டை வடிவில் இருக்கும் ஜாதிக்காய், மற்றொன்று, ஜாதிக்காயின் மேல் பகுதியைச் சுற்றிக் காணப்படும் தோல் பகுதி. இதற்குப் பெயர், ஜாதிப்பத்ரி (Mace).
ஜாதிக்காய், ஜாதிப்பத்ரி ஆகிய இரண்டிற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை. எனினும் ஜாதிக்காயில் இனிப்புச் சுவை அதிகம். ஜாதிப்பத்ரியில் காரத்தன்மை மிகுதி. காரத்தன்மை என்றதும், மிளகாயை நினைத்துக்கொள்ள வேண்டாம். இலவங்கப் பட்டைப் பொடியும், மிளகுப் பொடியும் கலந்திருந்தால் எப்படி நமக்கு நாக்கு கொஞ்சம் சுளீரென்று இருக்குமோ, அப்படித்தான் இருக்கும். அதனால் தான் சில நாடுகளில், காரத்திற்காக ஜாதிப்பத்ரி பொடி மட்டுமே சேர்க்கும் வழக்கம் உள்ளது.
எதிலிருந்து கிடைக்கிறது?
எப்போதும் பசுமையுடன் காணப்படும் ஜாதிக்காய் மரத்திலிருந்து கிடைக்கிறது. ஜாதிக்காய் மரம் நட்டால், இருபது ஆண்டுகள் கழித்து, முழு உற்பத்தியைப் பெற முடியும். ஆனால், நட்ட ஏழு ஆண்டுகளில் ஓரளவு நமக்கு காய்கள் கிடைக்க தொடங்கிவிடும்.
மலேசியாவின் பினாங்குத் தீவு மற்றும் கரீபியன் தீவுகளிலும் ஜாதிக்காய் அதிகளவில் விளைகின்றன. அங்கிருந்துதான் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவில் கேரளத்தின் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் போன்ற மாவட்டங்களில் ஜாதிக்காய் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இவை தவிர, கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஜாதிக்காய் விளைவிக்கப்படுகிறது.
மருத்துவப் பலன்கள்:
ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்ரி ஆகிய இரண்டுமே மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது. குறிப்பாக வயிற்றுப்போக்கு,குமட்டல், வயிற்றுவலி மற்றும் வயிறு இழுத்துப் பிடித்துக் கொள்வது போன்ற உடல் உபாதைகளுக்கு ஜாதிக்காய் நல்ல தீர்வைத் தருகிறது.
இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைப் பிரச்னைக்கு ஜாதிக்காய் கைகண்ட மருந்து. தூக்கம் வராமல் தவிக்கும்போது ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து அருந்தினால் தூக்கம் வரும்.ஜாதிக்காய் எண்ணெய், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மூளை மற்றும் நரம்பு சார்ந்த நோய்களான அல்சீமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
சமையலறையில்...
இந்திய சமையலில் காரம், இனிப்பு ஆகிய இரண்டுவகை உணவு பண்டங்களுக்கும் ஜாதிக்காய் பயன்படுகிறது. ஜப்பான் நாட்டில், இதுதான் கறிபொடி. இந்தோனேஷியாவில் பெரும்பாலான உணவு பண்டங்களில் ஜாதிக்காய் இல்லாமல் இருக்காது. ஐரோப்பியர்கள், சாஸ், ஜாம், சாலட் போன்ற பலவற்றுக்கும் ஜாதிக்காயைப் பயன்படுத்துவார்கள். ஜாதிக்காய், விலை உயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்று.
- கொக்கோ

