sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பரபர பரம்பிக்குளம்!

/

பரபர பரம்பிக்குளம்!

பரபர பரம்பிக்குளம்!

பரபர பரம்பிக்குளம்!


PUBLISHED ON : ஏப் 09, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தின் முக்கியமான 'டூர்' பிரதேசங்களில் ஒன்று, கேரள எல்லையில் இருக்கும் பரம்பிக்குளம். இந்த இடத்தின் சுவாரசியமே இதன் யானைகள் தான். பசுமை மிச்சமிருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. சென்னையிலிருந்து கோவை வரை ரயில். பின்னர், ஒரு வேனில் பொள்ளாச்சி வழியாக, பரம்பிக்குளம் பயணம். அங்கே வனத்துறை கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கினோம். தனியார் தங்குமிடங்களும் இருக்கின்றன.

வழியில் ஆங்காங்கே மான்கள் கூட்டம், மயில்கள், காட்டெருமைகள் தென்பட்டன. நமது தெரு விளக்கு ஒளியில் நட்சத்திரங்களைப் பார்ப்பது ஒருவகை. மொட்டைமாடியில் நின்று பார்ப்பது இன்னொரு வகை. காட்டில் பார்ப்பது முற்றிலும் வேறு வகை. மலைக்காட்டில் வண்டுகளின் ரீங்காரத்துடன் நட்சத்திரங்களைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. இன்னும் வெளிச்சமாக, இன்னும் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

'பயணத்துக்காகவே பயணம் மேற்கொள்வது' என்பதுதான் எங்களது 'சாவித்ரிபாய் பூலே பெண்கள் பயணக்குழு'வின் அடிப்படை நோக்கம். ஒருவருடனே இணைந்து சுற்றக் கூடாது; எல்லோருடனும் கலந்துபழக வேண்டும்; அம்மா, மகளே ஆனாலும் சேர்ந்தே இருக்கக் கூடாது. எலலோருமே தோழர்கள். இப்படிச் சில விதிகளைக் கடைப்பிடித்து, அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்வோம். இப்போது எங்கள் குழுவில் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறோம்.

காட்டில் நடைபயணம்

மறுநாள் காலை ஐந்து மணிக்கு பறவைகள் இசைக்க ஆரம்பித்தன. ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று. சிம்ஃபொனிபோல மயக்கும் இசைக்கச்சேரி. வனத்துறை அலுவலகம் ஏற்பாடு செய்து கொடுத்த 'வழிகாட்டி' இருவர் எங்களுடன் வந்தனர்.

காட்டிற்குள் மென்மையான மழைத் தூறல். இரண்டு மணிநேரம் நிதான நடை. வழிகாட்டி -அங்கேயே வசிக்கும் பழங்குடி. காட்டின் கைரேகை அறிந்தவர். விஷக்காளான் காண்பித்தார். அதை முகர்ந்தாலே வாந்தியும் மயக்கமும் வருமாம். ஈர மண்ணில், புலியின் பாதத்தடம் காட்டினார். யானை சென்றவழி பார்த்தோம்.

யானையின் சாணம் சூடாக இருந்தால், அப்போதுதான் கடந்து போயிருக்கிறது என்பதையும், அது காய்ந்த விதத்தை வைத்து எவ்வளவு நாட்கள் முன்பு அந்தப் பாதையைக் கடந்து போயிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாமாம். அதன் சாணத்தில், ஆறு மாதத்துக்கு மேல் வாழும் சிற்றுயிரிகள் இருக்கும். விதவிதமான பறவைகள், மரங்கள் பற்றி விவரித்தபடியே வந்தார். காட்டை நேசித்து, இயற்கை சார்ந்து அவர்கள் வாழ்வது தெரிந்தது. பறக்கும் அணில்கள் பார்த்தோம். ஒரு பறவை எழுப்பிய ஒலிக்கு, இன்னொன்று பதில் சொல்கிற விதம் கேட்டோம்.

பிறகு மழை வலுக்க, அடர் மழையில், யானை சவாரி. அதற்குப் பிறகு பரம்பிக்குளத்தின் பெருமையான மூங்கில் படகு சவாரி. மூங்கில் சவாரி செய்த நிமிடங்கள் அற்புதமானவை. கண்ணெட்டும் தூரத்தில் முதலை அமைதியாக இருந்தது. அதைப் பற்றி படகு ஓட்டிகள் 'எந்த மிருகமும் பசிக்காக மட்டுமே வேட்டையாடும். பசியாறிய பிறகு அமைதியாக இருக்கும்' என்று சொன்னார்கள்.

பரம்பிக்குளத்தில், உலகிலேயே பெரிய 'கன்னிமாரா தேக்கு மரம்' ஒன்று உள்ளது. ஆறேழு பேர் சேர்ந்து கைகள் விரித்து கட்டிப் பிடிக்க முடியாத அளவு பெரியது. 40 மீட்டர் உயரம் அது. நானூற்று அறுபது ஆண்டுகளுக்கும் முந்தையது. அதையும் கண்டு களித்தோம்.

ஆழியார் அணைக்கும் சென்றிருந்தோம். அன்று விடுமுறை என்பதால், படகு சவாரி போகமுடியவில்லை. வெளியே கடையில் சுடச்சுட விதவிதமான மீன்கள். சுவையோ சுவை!​

வீடு, அலுவலகம் மறந்தோம், இரண்டு நாட்கள் உலகின் எந்தக் கவலைகளும் இல்லை. இயற்கையின் எழில் கண்டு திகைத்து நின்ற நாட்கள் அவை.

கோவை டூ டாப்ஸ்லிப் சாலை வழி:

பொள்ளாச்சி வழியாக 79 கி.மீ.

டாப்ஸ்லிப் டூ பரம்பிக்குளம் (கேரளம்): 38 கி.மீ.

பார்க்க வேண்டிய இடங்கள்: டைகர் ரிசர்வ்ஸ், அணை, கன்னிமாரா தேக்கு மரம்

தவறவிடக் கூடாதவை: காட்டினுள் நடப்பது, யானை சவாரி, மூங்கில் படகு சவாரி






      Dinamalar
      Follow us