PUBLISHED ON : அக் 28, 2024

முத்துச் சிப்பிகள், கடலின் ஆழத்தில் வாழும் மெல்லுடலிகளாகும்.
உண்மை. முத்துச் சிப்பிகள் (Pearl Oyster) இரண்டு ஓடுகள் உடைய, நீர்வாழ் மெல்லுடலிகளாகும். கடலின் அடிப்பாகத்தில், பவளப்புற்றுக்கள், பாறைகள், கடினமான தரையுள்ள இடங்களில் பற்றிப் பிடித்து வாழ்பவை. இவை தங்களது உடலில் இருந்து மிகவும் அழகான, மதிப்புமிக்க முத்துகளை உருவாக்கும். ஒரு சிறு துகள் (மணல் துகள், சிறிய உயிரி) சிப்பியின் உள்ளே நுழையும் போது, சிப்பி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அந்தத் துகளைச் சுற்றி ஒரு வகையான பொருளைச் சுரக்கிறது. இந்தப் பொருள் பல அடுக்குகளாகச் சேர்ந்து, பளபளப்பான, கோள வடிவ முத்தாக மாறுகிறது.
இவை அடர்த்தியாக வாழும் இடங்களை 'முத்து வங்கிகள்' என்று அழைப்பர். கரையிலிருந்து 20 மீட்டர் ஆழம் வரை, உப்பு நீர் உள்ள இடங்கள் இதன் வாழிடங்களாகும். இந்தியா, சீனா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில் இவை அதிகளவில் காணப்படுகின்றன.
இந்தியாவில் மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா உள்ளிட்ட இடங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றிலும் இவை அதிகளவில் கிடைக்கின்றன.
இவற்றில், பிங்க்டேடா பகேட்டா (Pinctada fucata) என்னும் அறிவியல் பெயர் கொண்ட சிப்பி அதிகமாகக் கிடைக்கிறது. இது செயற்கை வளர்ப்புக்கு உகந்ததும் ஆகும்.