PUBLISHED ON : நவ 26, 2018

நிதி அரோரா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். வேலை நிமித்தமாக பல்வேறு நேர்முகத் தேர்வுகளை நடத்துபவர். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, நல்ல மதிப்பெண்களோடு பட்டம் பெறும் இளைஞர்கள் மத்தியில் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் இல்லை.
விதிவிலக்காக சில இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. விசாரித்துப் பார்த்ததில், அவர்கள் அனைவருமே சிறுவயது முதலே நாளிதழ் வாசிக்கும் வழக்கத்தை உடையவர்கள் என்பதை அறிந்துகொண்டார் நிதி.
தனது 8 வயது மகனுக்கு நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தபோது, அவரால் சிறுவர்களின் புரிதலுக்கு ஏற்ற நாளிதழைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தேடித்தேடி சலிப்படைந்து, தம் வீட்டிலேயே 4 பக்கம் கொண்ட சிறிய நாளிதழை 2017ஆம் ஆண்டு தயார் செய்தார். 'சில்ட்ரன்'ஸ் போஸ்ட்' எனும் சிறுவர்களுக்கான ஆங்கில நாளிதழ் அப்படித்தான் உருவானது. 'குர்காவ் அன்னையர்' எனும் முகநூல் குழுவில் இருந்த பெண்களின் ஆதரவுடன் அப்பத்திரிகை வெளியாகத் தொடங்கியது.
8 முதல் 13 வயதுக்குள் உள்ள இளையோருக்காகத் தயாராகும் இவ்விதழ், பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பி.டி.எப். (PDF) வடிவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அவர்கள் A4 அளவு தாள்களில் அச்சிட்டு இளையோருக்குத் தர முடியும்.
இதில் உலகச் செய்திகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம், வரலாறு, தொழில்நுட்பம், இந்திய ஜனநாயக அமைப்பு என, எல்லா வகைச் செய்திகளும் உண்டு. கவிதைகள், சிறுகதைகள், கார்ட்டூன்கள், புதிர்கள், கேள்வி பதில் பகுதி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த இந்த நாளிதழின் இப்போதைய வாசகர் எண்ணிக்கை 3,000 ஆகும்.
